கால்பந்து

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி ‘சாம்பியன்’ + "||" + La Liga football: Real Madrid team 'champion'

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி ‘சாம்பியன்’

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி ‘சாம்பியன்’
லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி ஒரு லீக் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மாட்ரிட்,

20 அணிகள் பங்கேற்றுள்ள லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, வில்லார்ரியலை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்டன. 29-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா, எதிரணி கோல்கீப்பர் செர்ஜியோ அசென்ஜோவின் கால்களுக்கு இடையே பந்தை லாவகமாக அடித்து கோலாக்கினார்.

இதன் பின்னர் 76-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் செர்ஜியோ ரமோஸ் தட்டிக்கொடுத்த பந்தை பென்ஜிமா கோலுக்குள் திணித்தார். செர்ஜியோ ரமோஸ் பந்தை தட்டி விடுவதற்கு முன்பாகவே பென்ஜிமா நகர்ந்ததால் அதனை கோல் இல்லை என்று அறிவித்த நடுவர் மீண்டும் பெனால்டி வாய்ப்பை வழங்கினார். இதற்கு எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்தும் பலன் இல்லாமல் போனது. மீண்டும் அளிக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை பென்ஜிமா கோலாக மாற்றினார். இந்த சீசனில் அவர் அடித்த 21-வது கோல் இதுவாகும்.

பதில் கோல் திருப்ப ஆக்ரோஷமாக போராடிய வில்லார்ரியல் அணி 86-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தது. அந்த அணியின் மாற்று ஆட்டக்காரர் இபோரா தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளினார். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வில்லார்ரியலை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பு இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக 10-வது வெற்றியை சுவைத்த ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தையும் சொந்தமாக்கியது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ரியல் மாட்ரிட் பட்டத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த போட்டியில் அந்த அணி பட்டத்தை வெல்வது இது 34-வது முறையாகும்.

ரியல் மாட்ரிட் அணி 37 ஆட்டத்தில் ஆடி 26 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 86 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இன்னும் ஒரு லீக் ஆட்டம் இருந்தாலும் அதன் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா அணி சொந்த மைதானத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஒசாசுனாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு சாம்பியனான அந்த அணி 37 ஆட்டத்தில் விளையாடி 79 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

மகுடம் சூடிய பிறகு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜிடேன் கூறுகையில் ‘எனது கால்பந்து வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்றாகும். 3 மாத இடைவெளிக்கு பிறகு எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் அற்புதமானது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதை விட இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலை எல்லோருக்கும் புதிதானது. சூழ்நிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் ரசிகர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சுகாதார விதிமுறைகளால் அது நடக்காமல் போய் விட்டது. வருங்காலத்தில் எங்களது வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறோம்.’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி அபார வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றிபெற்றது.
2. லா லிகா கால்பந்து: அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி
நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது
3. லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அசத்தல் வெற்றி
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
4. லா லிகா கால்பந்து: மெஸ்சி கோலால் பார்சிலோனா அணி வெற்றி
பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது.