கால்பந்து

சீரி ‘ஏ’ கால்பந்து: யுவென்டஸ் அணி மீண்டும் ‘சாம்பியன்’ + "||" + Juventus win ninth consecutive Serie A title

சீரி ‘ஏ’ கால்பந்து: யுவென்டஸ் அணி மீண்டும் ‘சாம்பியன்’

சீரி ‘ஏ’ கால்பந்து: யுவென்டஸ் அணி மீண்டும் ‘சாம்பியன்’
சீரி ‘ஏ’ கால்பந்து போட்டியில், யுவென்டஸ் அணி மீண்டும் ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
மிலன், 

20 அணிகள் இடையிலான சீரி ‘ஏ’ கிளப் கால்பந்து போட்டி இத்தாலியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான யுவென்டஸ் அணி, சாம்ப்டோரியா அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சாம்ப்டோரியாவை வீழ்த்தியது. யுவென்டஸ் அணி தரப்பில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் பாதியின் கடைசி நிமிடத்திலும் (இஞ்சுரி டைம்), பெடெரிகோ பெர்னார்டெசி 67-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 

ரொனால்டோ இந்த போட்டி தொடரில் அடித்த 31-வது கோல் இதுவாகும். ஆனால் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ கோலாக்காமல் கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தார். இந்த போட்டியில் முந்தைய 12 பெனால்டி வாய்ப்புகளை துல்லியமாக கோலாக்கிய ரொனால்டோ 12 அடி தூரத்தில் இருந்து அடித்த இந்த பெனால்டி வாய்ப்பை கோலாக்க தவறினார். சாம்ப்டோரியா அணி பதில் கோல் திருப்ப தாக்குதல் ஆட்டத்தை கடுமையாக தொடுத்தாலும் அதற்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 

சாம்ப்டோரியா அணி வீரர் மோர்டென் தோர்சி எதிரணி வீரரை 2-வது முறையாக பவுல் செய்ததால் 77-வது நிமிடத்தில் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது. 36-வது ஆட்டத்தில் ஆடிய யுவென்டஸ் அணி 26 வெற்றி, 5 டிரா, 5 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தொடர்ச்சியாக 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய யுவென்டஸ் அணி ஒட்டுமொத்தத்தில் வென்ற 36-வது பட்டம் இதுவாகும். இன்டர் மிலன் அணி 36 ஆட்டத்தில் விளையாடி 22 வெற்றி, 10 டிரா, 4 தோல்வியுடன் 76 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.