கால்பந்து

பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகுகிறார் மெஸ்சி + "||" + Messi leaves Barcelona club

பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகுகிறார் மெஸ்சி

பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகுகிறார் மெஸ்சி
பார்சிலோனா கிளப்பில் இருந்து தன்னை விடுவிக்கும்படி மெஸ்சி அந்த கிளப் நிர்வாகத்துக்கு பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார்.
பார்சிலோனா,

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர் விருதை 6 முறை கைப்பற்றியவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்சி தொடக்கம் முதலே ஸ்பெயினை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். 2000-ம் ஆண்டில் தனது 13-வது வயதில் பார்சிலோனா கிளப்பில் இளம் வீரராக கால்பதித்த மெஸ்சி அது முதல் அந்த அணிக்காக தொடர்ந்து விளையாடி எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில் போர்ச்சுகலில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த மோசமான தோல்வியால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளராக இருந்த குயிக் சேட்டின் (ஸ்பெயின்) அதிரடியாக நீக்கப்பட்டு ரொனால்டு கோமென் (நெதர்லாந்து) புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன் பார்சிலோனா கிளப்புடனான 20 ஆண்டு கால பயணத்தை மெஸ்சி முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகின.


இந்த நிலையில் பார்சிலோனா கிளப்பில் இருந்து தன்னை உடனடியாக இலவச பரிமாற்ற விதிமுறையின் அடிப்படையில் விடுவிக்கும்படி மெஸ்சி அந்த கிளப் நிர்வாகத்துக்கு பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார். ஆனால் அடுத்த ஆண்டு (2021) வரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் மெஸ்சி கடந்த ஜூன் மாதத்துக்குள் தனது விலகல் முடிவை தெரிவித்து இருந்தால் கிளப்பை விட்டு இலவசமாக வெளியேற விதிமுறையில் இடம் இருக்கிறது என்றும், காலம் கடந்து விட்டதால் தற்போது அந்த விதிமுறை பொருந்தாது என்றும் கிளப் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மெஸ்சி பார்சிலோனா கிளப்பில் இருந்து வேறு கிளப்புக்கு மாற வேண்டுமானால் சுமார் ரூ.6,130 கோடியை பார்சிலோனா கிளப்புக்கு கட்டணமாக செலுத்த வேண்டியது வரும் என்று தெரிகிறது. இதனால் மெஸ்சியின் வெளியேற்றத்தில் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்கள் பலரும் மெஸ்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பார்சிலோனா கிளப்பின் அடையாளமாக வர்ணிக்கப்படும் மெஸ்சியை அந்த நிர்வாகம் சரியாக கையாளவில்லை என்று அவரது ரசிகர்கள் பார்சிலோனா கிளப்பின் உள்ளூர் மைதானம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 33 வயதான மெஸ்சி பார்சிலோனா அணிக்காக 731 போட்டிகளில் பங்கேற்று 634 கோல்கள் அடித்துள்ளார். அந்த அணி 10 லா லிகா பட்டம், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டம் உள்பட 34 கோப்பைகளை வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.