உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா-பராகுவே ஆட்டம் ‘டிரா’


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா-பராகுவே ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 13 Nov 2020 10:58 PM GMT (Updated: 13 Nov 2020 10:58 PM GMT)

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜென்டினா-பராகுவே அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

பியூனஸ் அயர்ஸ்,

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. இதற்கு போட்டியை நடத்தும் கத்தார் தவிர எஞ்சிய 31 அணிகளும் தகுதி சுற்று ஆட்டங்கள் மூலமே தகுதி காண முடியும்.

இந்த போட்டிக்கு தென்அமெரிக்க கண்டத்தில் இருந்து 5 அணிகள் தகுதி பெறும். தென்அமெரிக்க கண்டத்துக்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். 5-வது இடத்தை பிடிக்கும் அணி, பிற கண்டத்தை சேர்ந்த அணியுடன் ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதி அதன் மூலம் வாய்ப்பு பெறும்.

இதில் பியூனஸ் அயர்சில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி, பராகுவேயை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் அர்ஜென்டினாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 21-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பராகுவே அணி முதல் கோலை அடித்து அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர் ஏஞ்சல் ரோமிரோ இந்த கோலை அடித்தார்.

41-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் நிகோலஸ் கோன்ஜாலிஸ் பதில் கோல் திருப்பினார். இதனால் முதல் பாதியில் 1-1 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் கோதாவில் கடுமையாக மல்லுக்கட்டின. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி 58-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்குள் திணித்த பந்தை கோல் இல்லை என்று போட்டி அதிகாரிகள் மறுத்து விட்டனர். அந்த பந்தை தொடக்கத்தில் கடத்தி கொடுத்த சக வீரர் கோன்ஜாலிஸ் பவுல் செய்தது வீடியோ உதவி நடுவரின் மறுபரிசீலனையில் தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு ‘பிரிகிக்’ வாய்ப்பை மெஸ்சி கோட்டை விட்டார். இரு அணி வீரர்களின் சில முயற்சிகள் மயிரிழையில் கோல் கம்பத்துக்கு வெளியே சென்றன. முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் (சமனில்) முடிந்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய அர்ஜென்டினா அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. தோல்வியை சந்திக்காத பராகுவே அணி கண்ட 2-வது டிரா இதுவாகும்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் ஈகுவடார் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. பொலிவியா அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

Next Story