நேஷன்ஸ் லீக் கால்பந்து: பெல்ஜியம், இத்தாலி அணிகள் வெற்றி


நேஷன்ஸ் லீக் கால்பந்து: பெல்ஜியம், இத்தாலி அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 16 Nov 2020 8:55 PM GMT (Updated: 16 Nov 2020 8:55 PM GMT)

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பெல்ஜியம், இத்தாலி ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

லிவென், 

ஐரோப்பிய அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இதில் பெல்ஜியத்தில் உள்ள லிவென் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. பெல்ஜியம் அணி தரப்பில் யூரி டிலிமான்ஸ் 10-வது நிமிடத்திலும், டியஸ் மெர்டென்ஸ் 23-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் (55 சதவீதம்) வைத்து இருந்த இங்கிலாந்து அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. 5-வது ஆட்டத்தில் ஆடிய பெல்ஜியம் அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன் அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் நடைபெறும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 2-வது தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை சாய்த்தது. இத்தாலி அணியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜோர்ஜின்ஹோ 27-வது நிமிடத்திலும், டோமினிகோ பெரார்டி 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 2 வெற்றி, 3 டிரா கண்டு இருக்கும் இத்தாலி அணி தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. இன்னொரு லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை பதம் பார்த்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டென்மார்க் அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

Next Story