கால்பந்து போட்டியில் 643 கோல்கள்: தனது சாதனையை சமன் செய்த மெஸ்சிக்கு பீலே வாழ்த்து


கால்பந்து போட்டியில் 643 கோல்கள்:  தனது சாதனையை சமன் செய்த மெஸ்சிக்கு பீலே வாழ்த்து
x
தினத்தந்தி 20 Dec 2020 5:32 PM GMT (Updated: 20 Dec 2020 5:32 PM GMT)

கால்பந்து விளையாட்டில் தனது கோல்களுக்கு நிகராக சமன் செய்த லயோனல் மெஸ்சிக்கு பிரேசில் வீரர் பீலே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சாவோ பவுலோ,

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 80).  கடந்த 1956ம் ஆண்டு தனது 15வது வயதில் கால்பந்து விளையாட்டில் இறங்கி தொடர்ந்து 1974ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர்.  இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்களையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.

உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.  தனது அணிக்காக பீலே 643 கோல்களை அடித்து உள்ளார்.  இதேபோன்று அர்ஜெண்டினா நாட்டின் கால்பந்து வீரரான மெஸ்சி வேலென்சியா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி இந்த கோல்களை அடித்து பீலேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அவருக்கு பீலே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  உனது இருதயம் அன்பு நிறைந்து வழிந்தோடும்பொழுது, உன்னுடைய பாதையை மாற்றுவது கடினம்.  வரலாற்று சாதனைக்கு என்னுடைய வாழ்த்துகள்.  இவை அனைத்திற்கும் மேலாக பார்சிலோனா அணியில் தொடரும் உனது விளையாட்டுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு தனது 17வது வயதில் பார்சிலோனா அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய மெஸ்சி, இதுவரை 748 போட்டிகளில் பங்கேற்று 643 கோல்களை எடுத்துள்ளார்.  ஆனால், சான்டோஸ் அணிக்காக விளையாடிய பீலே 665 போட்டிகளிலேயே இந்த எண்ணிக்கையை தொட்டு விட்டார்.

Next Story