2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது - பயிற்சியாளர் லாங்கர் தகவல்


2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது - பயிற்சியாளர் லாங்கர் தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2020 11:18 PM GMT (Updated: 24 Dec 2020 11:18 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.

மெல்போர்ன்,

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மெல்போர்னில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற்ற விதத்தை பார்த்த பிறகு 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றம் கொண்டு வர நான் மிகுந்த துணிச்சல் கொண்டவனாக இருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக ஏதாவது ஏற்பட்டால் தவிர எங்கள் அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

ஒருவரும் இல்லாததற்கு மெல்போர்ன் மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் இருப்பது எவ்வளவோ மேலானது. சில வாரங்களுக்கு முன்பு மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் இருந்தோம். ஒவ்வொரு முறை இங்கு விளையாட வரும் போது எனக்கு சிலிர்ப்பு ஏற்படும். அபாரமான மைதானமான இங்கு விளையாடுவதற்கு வீரர்கள் மிகவும் விரும்புவார்கள்.

இந்த தருணத்தில் நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்கள். அது என்னுடைய வேலையில்லை. எனக்கு போதுமான மன அழுத்தங்கள் இருந்தன. இந்திய அணியினரின் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறேன். இந்திய அணியினரின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். கிறிஸ்துமஸ் வார காலத்தில் இதுபோன்ற மன அழுத்தம் எங்களுக்கு வராததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

விராட்கோலி எல்லா நேரங்களிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியின் முக்கியமான பவுலர். எந்த அணியாக இருந்தாலும் சிறந்த வீரர்கள் வெளியேறுவதன் மூலம் பலவீனம் அடையத் தான் செய்யும். அவர்கள் இருவரும் இல்லாதது நிச்சயம் எங்களுக்கு அனுகூலமாக இருக்கும். முதல் நாளில் நாங்கள் வலுவான தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கவனிக்கும் ரஹானேவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். டேவிட் வார்னர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்ப எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார். முழு வேகத்துடன் ஓடுவதில் அவருக்கு பிரச்சினை இருக்கிறது. அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறோம். அவரை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு ஜஸ்டின் லாங்கர் கூறினார்.

Next Story