கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்தில் மகுடம் யாருக்கு? மோகன் பகான்-மும்பை இன்று பலப்பரீட்சை + "||" + ISL In football Mohan Bagan-Mumbai match today

ஐ.எஸ்.எல். கால்பந்தில் மகுடம் யாருக்கு? மோகன் பகான்-மும்பை இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். கால்பந்தில் மகுடம் யாருக்கு? மோகன் பகான்-மும்பை இன்று பலப்பரீட்சை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-மும்பை அணிகள் மோதுகின்றன.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், பெங்களூரு, சென்னை, ஈஸ்ட் பெங்கால், கேரளா பிளாஸ்டர்ஸ், ஒடிசா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

மும்பை அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது. அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கோவாவில் இன்று இரவு நடைபெறும் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் ஏ.டி.கே.மோகன் பகான்-மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை அணி 2 லீக் ஆட்டங்களிலும் ஏ.டி.கே.மோகன் பகான் அணியை சாய்த்து இருப்பதால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டங்களில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து மகுடத்தை கைப்பற்ற மோகன் பகான் அணி மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மோகன் பகான் அணியில் ராய் கிருஷ்ணா இதுவரை 14 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோவா வீரர் இகோர் அன்குலோவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இறுதிப்போட்டியில் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தால் அதிக கோல் அடித்தவருக்குரிய தங்க காலணியை வெல்ல முடியும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.