ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி முதல்முறையாக ‘சாம்பியன்’


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 14 March 2021 4:05 AM GMT (Updated: 14 March 2021 4:05 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ந் தேதி தொடங்கி நடந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி அணி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகானை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்ததால் பரபரப்பாக நகர்ந்தது. 18-வது நிமிடத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் கேப்டன் ராய் கிருஷ்ணா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் டேவிட் வில்லியம்ஸ் கோல் வலையத்துக்குள் திணித்தார்.

29-வது நிமிடத்தில் மும்பை வீரர் அகமது ஜாகோ கோலை நோக்கி அடித்த பந்தை மோகன் பகான் அணியின் வீரர் திரி தலையால் முட்டி தடுத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த பந்து கோல் வலையத்துக்குள் புகுந்து சுய கோலாக மாறியது. முதல் பாதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) மும்பை அணி வீரர் பிபின் சிங் அருமையாக கோல் அடித்தார். இதனால் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகானை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைத்த முதல் முயற்சியிலேயே அந்த அணி கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு கோப்பையுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஏ.டி.கே. மோகன் பகான் அணிக்கு ரூ.4 கோடி பரிசாக அளிக்கப்பட்டது. இந்த போட்டி தொடரில் அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை கோவா அணி வீரர் இகோர்அன்குலோ (14 கோல்கள்) பெற்றார்.

சிறந்த கோல் கீப்பருக்கான தங்க குளோவ்ஸ் விருது ஏ.டி.கே. மோகன் பகான் அணியின் கோல் கீப்பர் அரிந்தம் பட்டாச்சார்ஜாவுக்கு வழங்கப்பட்டது.

Next Story