புரோ ஆக்கி லீக்: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அசத்தல்


புரோ ஆக்கி லீக்: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அசத்தல்
x
தினத்தந்தி 12 April 2021 1:15 AM GMT (Updated: 12 April 2021 1:15 AM GMT)

புரோ ஆக்கி லீக் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா.

பியூனஸ் அயர்ஸ், 

கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட 9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார். இதன் பின்னர் 28 மற்றும் 30-வது நிமிடங்களில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் பெரீரோ அடுத்தடுத்து கோல் போட்டார். இதனால் 1-2 என்ற கணக்கில் பின்தங்கிய இந்திய அணி கடைசி நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங்கின் சாதுர்யத்தால் தப்பியது. அதாவது ஆட்டம் முடிய வெறும் 6 வினாடி மட்டுமே இருந்த நிலையில் அவர் பெனால்டி கார்னர் வாய்ப்பில் மறுபடியும் கோல் அடித்து உள்ளூர் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். வழக்கமான ஆட்ட நேர முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதால் முடிவை தீர்மானிக்க ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றது. பெனால்டி ஷூட்-அவுட்டில் ஹீரோவாக ஜொலித்த இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் எதிரணியின் 5 வாய்ப்புகளில் மூன்றை முறியடித்து பிரமாதப்படுத்தினார். அதே சமயம் இ்ந்தியாவின் 5 வாய்ப்புகளில் ரூபிந்தர் சிங், லலித் உபாத்யாய், தில்பிரீத்சிங் ஆகியோர் கோலாக்கினர். திரில் லிங்கான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுடன், போனஸ் புள்ளியையும் தட்டிச் சென்றது.

இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா 12 புள்ளிகளுடன் 5-வது இடம் வகிக்கிறது. 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அர்ஜென்டினா 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. இந்தியா-அர்ஜென்டினா அணிகள் இதே மைதானத்தில் மீண்டும் ஒரு முறை மோத உள்ளன.

Next Story