கால்பந்து

லா லிகா கால்பந்து போட்டி: அத்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’ + "||" + La Liga Football Tournament: Atletico Madrid Team 'Champion'

லா லிகா கால்பந்து போட்டி: அத்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’

லா லிகா கால்பந்து போட்டி: அத்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’
லா லிகா கால்பந்து போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 11-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
மாட்ரிட்,

ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கிளப் கால்பந்து தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இந்த சீசனுக்கான போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. வழக்கம் போல் ஒவ்வொரு அணியும் மற்றஅணிகளுடன் தலா 2 முறை மோதின. இதில் பட்டம் வெல்வதில் அத்லெடிகோ மாட்ரிட் மற்றும் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று முன்தினம் இரவு அத்லெடிகோ மாட்ரிட் அணி தனது கடைசி லீக்கில் ரியல் வல்லாடோலிட் அணியை எதிர்கொண்டது. பட்டத்தை வசப்படுத்த குறைந்தது ‘டிரா’ செய்தாலே போதும் என்ற முனைப்புடன் அத்லெடிகோ அணி ஆடியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தின. 18-வது நிமிடத்தில் பின்கள வீரர்களை ஏமாற்றி வல்லாடோலிட் வீரர் ஆஸ்கர் பிளானோ கோல் அடித்தார். அதன் பிறகும் அந்த அணி மேலும் சில ஷாட்டுகளை உதைத்த போதிலும் அத்லெடிகோ கோல் கீப்பர் ஜன் ஓபிளாக் அவர்களின் முயற்சிகளை முறியடித்தார். பிற்பாதியில் அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள் தங்களது தாக்குதல் பாணியை தீவிரப்படுத்தி, வேகம் காட்டினர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அந்த அணி வீரர் ஏஞ்சல் கோரியா 57-வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

இதன் பின்னர் 67-வது நிமிடத்தில் அத்லெடிகோ மாட்ரிட் வீரர் லூயிஸ் சுவாரஸ் தனிவீரராக எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்துடன் முன்னேறினார். அப்போது பின்கள வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் கோல் கீப்பரை ஏமாற்றி லாவகமாக கோல் போட்டார். அதுவே கடைசியில் வெற்றி கோலாக அமைந்தது.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வல்லாடோலிட்டை தோற்கடித்தது. இதன் மூலம் அத்லெடிகோ மாட்ரிட் அணி 26 வெற்றி, 8 டிரா, 4 தோல்வி என்று 86 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது. கடந்த 7 ஆண்டுகளில் அந்த அணி வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் 11-வது மகுடமாகும்.

ரியல்மாட்ரிட் அணி 84 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா 79 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. கடைசி லீக்கில் தோல்வியை தழுவிய வல்லாடோலிட் 31 புள்ளிகளுடன் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், அடுத்த டிவிசனில் தரம் இறக்கப்பட்டது.

கடந்த சீசனில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய 34 வயதான லூயிஸ் சுவாரசை (உருகுவே) புதிய பயிற்சியாளர் ரொனால்டோ கோமன் கழற்றி விட திட்டமிட்டார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட சுவாரஸ் அத்லெடிகோ மாட்ரிட் கிளப்புக்கு மாறினார். நடப்பு தொடரில் மொத்தம் 21 கோல்கள் அடித்து அத்லெடிகோ அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

வெற்றிக்கனியை பறித்ததும் உணர்ச்சிவசப்பட்ட சுவாரஸ் கண்ணீர் விட்டார். அவர் கூறுகையில், ‘கடந்த சீசனில் உள்ள சூழல் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னை மிகவும் குறைத்து (பார்சிலோனா அணி) மதிப்பிட்டனர். ஆனால் இங்கு (அத்லெடிகோ) என்னை வரவேற்று, ஊக்கப்படுத்தி தொடர்ந்து வாய்ப்பு அளித்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அணி நிர்வாகம் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்’ என்றார்.