ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார், ஜிடேன்


ஜினேடின் ஜிடேன்
x
ஜினேடின் ஜிடேன்
தினத்தந்தி 27 May 2021 11:06 PM GMT (Updated: 27 May 2021 11:06 PM GMT)

ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜினேடின் ஜிடேன் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார்.

அவரது ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே பதவியை துறந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த இந்த சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடரில் அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. நடப்பு சாம்பியனான ரியல்மாட்ரிட் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் அந்த அணி அரைஇறுதியுடன் நடையை கட்டியது. தொடர்ச்சியான தோல்விகளால் இந்த கிளப்புக்கு அவர் விடைகொடுத்துள்ளார். ‘ஜிடேனின் முடிவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் அவரது தொழில்முறை பயிற்சி பணி, அர்ப்பணிப்பு, ஆர்வம் எல்லாவற்றுக்கும் நன்றி கடன்பட்டுள்ளோம். ரியல் மாட்ரிட்டின் தனி அடையாளங்களில் ஜிடேனும் ஒருவா். ரியல்மாட்ரிட் எப்போதும் அவரது சொந்த ஊர் அணி போன்றது என்பதை அவர் அறிவார்.’ என்று அந்த கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

2016-18-ம் ஆண்டு வரை ரியல்மாட்ரிட்டின் பயிற்சியாளராக இருந்த 48 வயதான ஜிடேன் அதன் பிறகு அந்த பதவியில் இருந்து விலகினார். அப்போது அவரது பயிற்சி காலத்தில் ரியல்மாட்ரிட் அணி கிளப்புக்கான உலக கோப்பை, சூப்பர் கோப்பை உள்பட 9 பட்டங்களை வென்று பிரமாதப்படுத்தியது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மறுபடியும் ரியல்மாட்ரிட்டின் பொறுப்பை ஏற்ற ஜிடேன் இந்த தடவை ஏமாற்றத்துடன் வெளியேறி இருக்கிறார். இந்த சீசனில் அந்த அணி எந்த பட்டமும் வெல்லவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு சீசன் ஒன்றில் ரியல்மாட்ரிட் ஒரு பட்டம் கூட வெல்லாதது இதுவே முதல்முறையாகும்.


Next Story