கால்பந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: செல்சி அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’; மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது + "||" + Chelsea Beats Manchester City to Win Its Second Champions League Title

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: செல்சி அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’; மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: செல்சி அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’; மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை தோற்கடித்து 2-வது முறையாக பட்டத்தை உச்சிமுகர்ந்தது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

66-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சி, மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன்ஸ் லீக்கில் 13 முறை பட்டம் வென்ற சாதனை படைத்த அணியான ரியல்மாட்ரிட் கிளப் (ஸ்பெயின்) அரைஇறுதியோடு வெளியேறியது.

இந்த நிலையில் செல்சி- மான்செஸ்டர் சிட்டி இடையிலான இறுதி ஆட்டம் போர்ச்சுகலில் உள்ள போர்டோ நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இரு அணிகளும் ஒரே நாட்டைச் சேர்ந்த கிளப்புகள் என்றாலும் கடுமையாக மல்லுகட்டின. முதல் 40 நிமிடங்களில் கோல் கம்பத்தை நெருங்குவதும், பிறகு கோல் வாய்ப்பை தவற விடுவதுமாக இருந்தன. இதில் 14-வது நிமிடத்தில் செல்சி வீரர் டிமோ வெர்னர் அடித்த நல்ல ஷாட் தடுக்கப்பட்டதும் அடங்கும். பந்து அதிக நேரம் மான்செஸ்டர் சிட்டியின் (58 சதவீதம்) கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும் அதிர்ஷ்ட காற்று செல்சி பக்கமே வீசியது.

செல்சி ‘சாம்பியன்’

விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் 42-வது நிமிடத்தில செல்சி வீரர் ஹவெர்ட்ஸ் சூப்பராக கோல் அடித்தார். சக வீரர் மாசோன் மவுன்ட் தட்டிக்கொடுத்த பந்துடன் தனியாக கோல் எல்லைக்குள் நுழைந்த போது, மான்செஸ்டர் கோல் கீப்பர் எடெர்சன் கம்பத்தை விட்டு வெளியே வந்து பாய்ந்து விழுந்து தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரிடம் சிக்காமல் தாண்டி ஓடியது. அதன் பிறகு கோல் கீப்பர் இன்றி வெறுமையாக இருந்த கோல் வலைக்குள் ஹவெர்ட்ஸ் பந்தை இடது காலால் உதைத்து தள்ளி கோலாக்கினார்.

பதிலடி கொடுக்க போராடிய மான்செஸ்டர் அணியின் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிட்டவில்லை. முடிவில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2-வது முறையாக மகுடத்தை சூடியது. ஏற்கனவே 2011-12-ம் ஆண்டும் பட்டத்தை வென்று இருக்கிறது. அதே சமயம் முதல்முறையாக இறுதிசுற்றுக்கு வந்திருந்த மான்செஸ்டர் அணி ஏமாற்றத்திற்கு உள்ளானது.

ஹவெர்ட்ஸ் நெகிழ்ச்சி

‘கோல் நாயகன்’ 21 வயதான ஜெர்மனியைச் சேர்ந்த ஹவெர்ட்ஸ் கூறுகையில் ‘எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த தருணத்துக்காகத் தான் நீண்டகாலமாக காத்திருந்தேன். இதற்காக 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். சாம்பியன்ஸ் லீக்கில் இதற்கு முன்பு நான் கோல் அடித்ததில்லை. இப்போது அதை செய்து விட்டேன். வெற்றிக்கு நாங்கள் தகுதியான அணி’ என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார்.

செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் 47 வயதான தாமஸ் துசெல் (ஜெர்மனி நாட்டவர்) கடந்த சீசனில் பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் பயிற்சியாளராக பணியாற்றிய போது அந்த அணி சாம்பியன்ஸ் லீக்கில் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டது. அதன் பிறகு செல்சி அணிக்கு தாவிய அவர் இப்போது அந்த அணியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். இதன் மூலம் செல்சியுடனான அவரது ஒப்பந்த காலம் மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

வாகை சூடிய செல்சி அணி ரூ.165 கோடியை பரிசுத்தொகையாக அள்ளியது. 2-வது இடம் பிடித்த மான்செஸ்டர் சிட்டிக்கு ரூ.133 கோடி கிடைத்தது.