உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியிடம் இந்தியா தோல்வி


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியிடம் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 4 Jun 2021 6:57 PM GMT (Updated: 4 Jun 2021 6:57 PM GMT)

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியிடம் இந்தியா தோல்வி.

தோகா,

2022-ம் ஆண்டுக்கான உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதில் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியன் கத்தாரை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கத்தார் அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து பெரும்பாலும் வலம் வந்தது. பந்தை கையால் கையாண்டது உள்பட இரண்டு முறை ‘பவுல்’ செய்து எச்சரிக்கைக்குள்ளான இந்திய அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ராகுல் பெகே (17-வது நிமிடம்) நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது. 33-வது நிமிடத்தில் கத்தார் அணியின் அப்துல்அஜிஸ் ஹதெம் கோல் அடித்தார். இந்திய வீரர் மன்விர் சிங் பதில் கோல் திருப்ப 2 முறை எடுத்த முயற்சி மயிரிழையில் கைநழுவி போனது. முடிவில் கத்தார் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. 7-வது ஆட்டத்தில் ஆடிய கத்தார் அணி 6 வெற்றி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா 3 டிரா, 3 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

Next Story