உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி தொடர்ந்து 6-வது வெற்றி


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி தொடர்ந்து 6-வது வெற்றி
x
தினத்தந்தி 10 Jun 2021 2:42 AM GMT (Updated: 10 Jun 2021 2:42 AM GMT)

2022-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

அசன்சியான், 

இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5-வது இடத்தை பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் மோத வேண்டி இருக்கும்.

இந்த நிலையில் தகுதி சுற்றில் நேற்று முன்தினம் இரவு அசன்சியான் நகரில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில், உள்ளூர் அணியான பராகுவேயை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்திலேயே பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் அருமையாக கோல் அடித்து அசத்தினார். அவரது 66-வது சர்வதேச கோல் இதுவாகும். பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவரான பீலேவின் சாதனையை முறியடிக்க நெய்மாருக்கு இன்னும் 12 கோல் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 90-வது நிமிடத்தில் பிரேசில் மாற்று ஆட்டக்காரர் லுகாஸ் பகெட்டா கோல் போட்டார்.முடிவில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்தது. இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள பிரேசில் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

அர்ஜென்டினா-கொலம்பியா (2-2),வெனிசுலா-உருகுவே (0-0),சிலி-பொலிவியா (1-1) ஆகிய அணிகள் மோதிய ஆட்டங்கள் ‘டிரா’ வில் முடிந்தன. அடுத்த தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 2-ந்தேதி நடக்கின்றன.

Next Story