ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இன்று 3 ஆட்டங்கள்


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இன்று 3 ஆட்டங்கள்
x
தினத்தந்தி 11 Jun 2021 9:47 PM GMT (Updated: 11 Jun 2021 9:47 PM GMT)

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) நேற்று தொடங்கியது.

11 நாடுகளில் நடக்கும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அது பற்றிய விவரம் வருமாறு:-

வேல்ஸ்-சுவிட்சர்லாந்து (ஏ பிரிவு)

இடம்: பாகு,  இந்திய நேரம்: இரவு 6.30 மணி

‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இவ்விரு அணிகளின் முதற்கட்ட இலக்கு நாக்-அவுட் சுற்றுக்கு செல்வது தான். ஆனால் இத்தாலி, துருக்கி ஆகிய பலமான அணிகளும் இருப்பதால் நாக்-அவுட் சுற்றை எட்டுவது எளிதான விஷயம் அல்ல. 2016-ம் ஆண்டு யூரோ சாம்பியன்ஷிப்பில் அரைஇறுதிவரை முன்னேறி வியப்பூட்டிய வேல்ஸ் அணியில் முந்தைய சாம்பியன்ஷிப்பில் ஆடிய 8 வீரர்கள் இப்போதும் நீடிக்கிறார்கள். ஆனால் காரெத் பாலே, ஆரோன் ராம்சி, ஜோ ஆலென், டேனியல் ஜேம்ஸ் உள்ளிட்டோர் முன்பு போல் உயரிய பார்மில் இல்லை. இருப்பினும் தகுதி சுற்றில் தங்கள் பிரிவில் 2-வது இடத்தை பிடித்ததால் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து கடைசியாக ஆடிய 6 சர்வதேச போட்டிகளில் வெற்றி கண்டிருக்கிறது. வலுவான ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் டிரா கண்டது. அந்த அணி வீரர்கள் இதே ஆட்டத்திறனை யூரோ தொடரிலும் காட்டினால் நிச்சயம் அடுத்த சுற்றை அடைய முடியும். கிரானிட் ஷாகா, ஹெர்டான் ஷாகிரி, டெனிஸ் ஜகாரியா, ரெமோ பிரெலர் நம்பிக்கை தருகிறார்கள். ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடையுடன் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு சந்தித்துள்ள 7 ஆட்டங்களில் 5-ல் சுவிட்சர்லாந்தும், 2-ல் வேல்சும் வெற்றி பெற்றுள்ளன.

டென்மார்க்-பின்லாந்து (பி பிரிவு)

இடம்: கோபன்ஹேகன், இந்திய நேரம்: இரவு 9.30 மணி

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கு பின்லாந்து அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கிறது. அவர்களுடன் ஒப்பிடும் போது 10-ம் நிலை அணியான டென்மார்க் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதுவும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆட இருப்பது சிமோன் கிஜார் தலைமையிலான டென்மார்க் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

பின்லாந்தை பொறுத்தவரை எதிர்பார்ப்பும் ஏதும் கிடையாது. ஆனால் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதி சுற்று போட்டிகளில் 10 கோல்கள் அடித்த டீமு புக்கி, பிரெட்ரிக் ஜென்சன் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர். பின்லாந்து பயிற்சியாளர் மார்க்கு கனேர்வா கூறுகையில், ‘கடந்த சில ஆட்டங்களில் டென்மார்க்கின் செயல்பாடு அருமையாக இருந்ததை பார்த்திருக்கிறோம். நிறைய கோல்கள் அடித்தனர். அவர்களை வீழ்த்துவது கடினம். அதுவும் சொந்த மண்ணில் ஆட உள்ளனர். அதே சமயம் டென்மார்க்கை விட பெரிய அணிகளுக்கு கூட எங்களால் கடும் சவால் அளிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது’ என்றார். இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 59 ஆட்டங்களில் 38-ல் டென்மார்க்கும், 11-ல் பின்லாந்தும் வெற்றி கண்டுள்ளன. 10 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

பெல்ஜியம்-ரஷியா (பி பிரிவு)

இடம்: செயின்ட்பீட்டர்ஸ் பர்க், இந்திய நேரம்: நள்ளிரவு 12.30 மணி

கோப்பையை வெல்ல வாய்ப்பு அணிகளில் ஒன்றான பெல்ஜியம் உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ்கிறது. ரோம்லு லுகாகு அவர்களின் ஆணிவேராக இருக்கிறார். கிளப் போட்டியில் ஆடிய போது முகத்தில் காயமடைந்த முன்னணி வீரர் கெவின் டி புருனே இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காயத்தால் அவதிப்படும் ஈடன் ஹசார்ட்டும் ஆடுவது சந்தேகம் தான். ஆனாலும் பெல்ஜியம் அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. தகுதி சுற்றுகளில் இரண்டு முறையும் ரஷியாவை 3-1, 4-1 என்ற கோல் வீதம் பந்தாடியது பெல்ஜியத்தின் உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

உலக தரவரிசையில் 38-வது இடம் வகிக்கும் ரஷியாவுக்கு உள்ளூர் சூழல் அனுகூலமாக அமையும். ஆனால் வலுமிக்க பெல்ஜியத்தை மிரட்ட வேண்டும் என்றால் அலெக்சாண்டர் கோலோவின், ஆர்டெம் ஜியூபா போன்ற ரஷிய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்த 7 ஆட்டங்களில் 5-ல் பெல்ஜியம் வெற்றி பெற்றது. மற்ற இரு ஆட்டங்களும் டிரா ஆனது.

மேற்கண்ட 3 ஆட்டங்களையும் சோனி சிக்ஸ், ேசானி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story