ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கியது இத்தாலி 3-0 கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்தது


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கியது இத்தாலி 3-0 கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்தது
x
தினத்தந்தி 13 Jun 2021 4:27 AM GMT (Updated: 13 Jun 2021 4:27 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்து வெற்றியுடன் தொடங்கியது.

ரோம்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று முன்தினம் இரவு கண்கவர் கலைநிகழ்ச்சி மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி வரை 11 நாடுகளில் அரங்கேறும் இந்த போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க விழாவை தொடர்ந்து ரோமில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலி-துருக்கி அணிகள் மோதின. முன்னாள் சாம்பியனான உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலி அணி தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்டு வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் (61 சதவீதம்) வலம் வந்தது. இருப்பினும் துருக்கியின் சிறப்பான தடுப்பாட்டத்தால் இத்தாலி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு முதல் பாதியில் முட்டுக்கட்டை விழுந்தது.

பிற்பாதியில் இத்தாலி வீரர்கள் எதிரணியினர் கோல் எல்லையை முற்றுகையிட்டு அலை அலையாய் தாக்குதல் தொடுத்தனர். 53-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு முதல் கோல் வந்தது. அந்த அணி வீரர் டோமினிகோ பெரார்டி கோல் வளையத்தை நோக்கி அடித்த பந்தை துருக்கியின் தடுப்பு ஆட்டக்காரர் மெரிக் டெமிரல் தடுக்க முயற்சித்தார். ஆனால் அந்த பந்து அவரது நெஞ்சில் பட்டு கோல் வளையத்துக்குள் புகுந்து சுயகோலானது. 66-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் லினார்டோ ஸ்பினாஜோலா உதைத்த பந்தை துருக்கி கோல்கீப்பர் உகுர்கன் காகிர் தடுத்த போது, அவரது கையில் பட்டு திரும்பியது. அதை மற்றொரு இத்தாலி வீரர் சிரோ இம்மோபில் மின்னல் வேகத்தில் கோலுக்குள் திணித்து அசத்தினார். 79-வது நிமிடத்தில் இத்தாலியின் இன்ஜைனி கோல் அடித்தார்.

துருக்கி அணி எதிர்தாக்குதல் நடத்துவது அரிதாகவே இருந்தது. முடிவில் இத்தாலி அணி 3-0 என்ற கணக்கில் துருக்கியை எளிதில் தோற்கடித்தது.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலி அணி 2 கோல்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இத்தாலி அணி தனது கடைசி 28 ஆட்டங்களில் ( 23 வெற்றி, 5 டிரா) தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ்-சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா

இதே பிரிவில் நேற்று பாகு நகரில் நடந்த சுவிட்சர்லாந்து-வேல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலா 49-வது நிமிடத்திலும், வேல்ஸ் வீரர் கீபொ் மூரே 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஷாட் அடிப்பதிலும், பந்தை கட்டுப்பாட்டில் (62 சதவீதம்) வைத்திருப்பதிலும் சுவிட்சர்லாந்தின் கை ஓங்கி இருந்தாலும் வேல்சின் சாதுர்யமான தடுப்புக்கு முன் அவர்களின் யுக்தி எடுபடாமல் போய் விட்டது.

இன்றைய ஆட்டங்கள்
இங்கிலாந்து-குரோஷியா (டி பிரிவு),

இடம்: லண்டன், இந்திய நேரம்: மாலை 6.30 மணி

ஆஸ்திரியா-வடக்கு மாசிடோனியா (சி பிரிவு),

இடம்: புச்சாரெஸ்ட், இந்திய நேரம்:இரவு 9.30 மணி

நெதர்லாந்து-உக்ரைன் (சி பிரிவு),

இடம்: ஆம்ஸ்டர்டாம், இந்திய நேரம்: நள்ளிரவு 12.30 மணி

டென்மார்க் வீரர் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஆட்டம் பாதியில் நிறுத்தம்

கோபன்ஹேகன், 

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்றிரவு கோபன்ஹேகன் நகரில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் டென்மார்க்- பின்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் 42-வது நிமிடத்தின் போது, டென்மார்க் நட்சத்திர வீரர் 29 வயதான கிறிஸ்டியன் எரிக்சென் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். இதனால் சக வீரர்களும், உள்ளூர் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். உடனடியாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு அவருக்கு 10 நிமிடம் முதலுதவி அளித்து பார்த்தனர். ஆனால் முழுமையாக அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரை ஸ்டிரச்சரில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சக வீரர்கள் கண்ணீர் மல்க மைதானத்திலேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர். மருத்துவ அவசர தேவை காரணமாக இந்த ஆட்டம் இடைநீக்கம் செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர். இதனால் ஆட்டம் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Next Story