ஐரோப்பிய கால்பந்து போட்டி: உக்ரைனை போராடி வீழ்த்தியது நெதர்லாந்து - செக்குடியரசு அணியிடம் பணிந்தது ஸ்காட்லாந்து


ஐரோப்பிய கால்பந்து போட்டி: உக்ரைனை போராடி வீழ்த்தியது நெதர்லாந்து - செக்குடியரசு அணியிடம் பணிந்தது ஸ்காட்லாந்து
x
தினத்தந்தி 15 Jun 2021 12:20 AM GMT (Updated: 15 Jun 2021 12:20 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை போராடி வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு அணி ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.

ஆம்ஸ்டர்டாம்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளை சேர்ந்த 11 நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணி, 24-வது இடத்தில் உள்ள உக்ரைனை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே நெதர்லாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த அந்த அணி வீரர்கள் அடிக்கடி எதிரணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு கோலடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் நெதர்லாந்து வீரர்களால் உக்ரைன் அணியின் தடுப்பு அரணை முதல் பாதியில் தகர்க்க முடியவில்லை. உக்ரைன் அணியின் கோல்கீப்பர் ஜார்ஜி புஷ்சன் எதிரணியினரின் பல அதிரடியான ஷாட்களை அருமையாக தடுத்து நிறுத்தி அமர்க்களப்படுத்தினார்.

பின்பாதியிலும் நெதர்லாந்து அணி தொடர்ந்து எதிரணிக்கு நெருக்கடி அளித்தது. 52-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் டென்சில் டம்பிரைஸ் கோலை நோக்கி அடித்த பந்தை உக்ரைன் அணியின் கோல்கீப்பர் ஜார்ஜி புஷ்சன் தரையில் விழுந்தபடி தடுத்தார். ஆனால் பந்து அவரது கையில் பட்டு திரும்பியது. அதனை நெதர்லாந்து கேப்டன் ஜார்ஜினோ விஜ்னால்டம் அதிரடியாக உதைத்து கோலாக்கினார். 59-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெகோர்ஸ்ட் கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

உக்ரைன் அணி வீரர்கள் பதில் கோல் திருப்ப அடிபட்ட வேங்கை போல ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதன் பலனாக 75-வது நிமிடத்தில் உக்ரைன் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் யார்மாலென்கோ 20 மீட்டர் தூரத்தில் இருந்து அடித்த பந்து அற்புதமாக கோல் வலைக்குள் ஊடுருவியது. 79-வது நிமிடத்தில் உக்ரைன் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. பிரிகிக் வாய்ப்பில் உக்ரைன் அணி வீரர் மலினோவ்ஸ்கி கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை அந்த அணியின் மற்றொரு வீரர் யாரெம்சுக் தலையால் முட்டி கோலாக்கினார். எனவே 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

இதனால் இந்த போட்டி டிராவை நோக்கி நகர்வது போல் இருந்தது. அதேநேரத்தில் வெற்றியை தன்வசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டின. பரபரப்பான சூழலில் 85-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணியின் மாற்று ஆட்டக்காரர் நாதன் அகி கோல் பகுதியை நோக்கி தூக்கி அடித்த பந்தை நெதர்லாந்து அணியின் இன்னொரு ஆட்டக்காரர் டென்சில் டம்பிரைஸ் தலையால் முட்டி கோல் வலைக்குள் அனுப்பினார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை போராடி வீழ்த்தியது.

கிளாஸ்கோவில் நேற்று நடந்த டி பிரிவு ஆட்டத்தில் செக்குடியரசு-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செக்குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. செக்குடியரசு அணியின் முன்கள வீரர் பேட்ரிக் சீக் 42-வது மற்றும் 52-வது நிமிடங்களில் அடித்தடுத்து கோல் அடித்தார். இதில் 52-வது நிமிடத்தில் மைதானத்தின் நடுவில் இருந்து அவர் அடித்த பந்து கோல்கீப்பரை தாண்டி கோல் வலைக்குள் புகுந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Next Story