ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டம் ‘டிரா’


ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 16 Jun 2021 2:51 AM GMT (Updated: 16 Jun 2021 2:51 AM GMT)

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டம் ‘டிரா’ வில் முடிந்தது.

தோகா,

2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றின் ‘இ’ பிரிவு ஆட்டங்கள் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா டிரா செய்தாலே ஆசிய கோப்பை தகுதிக்கான 3-வது சுற்றுக்கு நேரடியாக முன்னேற முடியும் என்ற நிலையிலும், இதில் வெற்றி பெற்றால் தான் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி காண முடியும் என்ற நெருக்கடியிலும் களம் இறங்கின. இரு அணிகளும் களத்தில் கடுமையாக போராடினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 75-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு எதிர்பாராத வகையில் கோல் வந்தது. இந்திய வீரர் ஆஷிக் குருனியன் கோலை நோக்கி தூக்கி அடித்த பந்தை ஆப்கானிஸ்தான் கோல்கீப்பர் ஒவைஸ் அஜிஜி துள்ளிக்குதித்து கையால் பிடித்தபடி தரைைய தொடுவதற்குள் பந்து அவரது கையில் இருந்து நழுவி காலில் பட்டு கோல் வலைக்குள் நுழைந்து சுயகோலானது. இந்திய அணிக்கு திடீரென கிடைத்த இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 85-வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் மாற்று ஆட்டக்காரர் ஹோசின் ஜமானி அபாரமான ஷாட் மூலம் பதில் கோல் திருப்பினார். இதனால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லீக் முடிவில் ஒரு வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 3-வது இடம் பிடித்த இந்திய அணி நேரடியாக 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

Next Story