ஐரோப்பிய கால்பந்து: நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


ஐரோப்பிய கால்பந்து: நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 19 Jun 2021 12:20 AM GMT (Updated: 2021-06-19T05:50:26+05:30)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரியாவை சாய்த்து நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஐரோப்பிய கால்பந்து
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி, ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி ஆரம்பம் முதலே தங்களது பிடியை இறுக்கியது. 11-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கேப்டன் டேவிட் அலபா, எதிரணி வீரர் டென்ஜல் டம்பிரைசின் காலை இடறி விட்டதால் நெதர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை அந்த அணியின் மெம்பிஸ் கோலாக்கினார். 40-வது நிமிடத்தில் அவர் இன்னொரு கோல் அடித்திருக்க வேண்டியது. கோல் வலையை நெருங்கியபோது தனக்கு வந்த பந்தை ஓங்கி உதைத்து கோலாக மாற்றியிருக்கலாம். அதற்கு பதிலாக இடது பக்கத்தில் நின்ற சக வீரர் வெகோஸ்டிடம் பந்தை தள்ளிவிட அவர் பந்தை கம்பத்திற்கு மேல்வாக்கில் அடித்து வீணடித்தார்.

நெதர்லாந்து அபாரம்
பிற்பாதியில் 67-வது நிமிடத்தில் நெதர்லாந்து இன்னொரு கோல் அடித்தது. பந்துடன் கோல் பகுதிக்குள் நுழைந்த நெதர்லாந்து வீரர் மலென் கம்பத்தை நெருங்கியதும் சக வீரர் டென்ஜல் டம்பிரைஸ் வசம் தட்டிவிட அவர் அதை அழகாக கோலாக்கினார். கடைசி வரை முயன்றும் ஆஸ்திரியா வீரர்களால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது. ஏற்கனவே தனது பிரிவில் உக்ரைனை வீழ்த்தியிருந்த நெதர்லாந்து அணி 2-வது வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறியது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு நெதர்லாந்து அணி முதல் முறையாக 2-வது சுற்றை எட்டியிருக்கிறது.

சுவீடன் வெற்றி
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் சுவீடன்-சுலோவக்கியா அணிகள் சந்தித்தன. 57 சதவீதம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சுலோவக்கியாவின் திடமான தடுப்பு அரணை உடைக்க முடியாமல் போராடிய சுவீடனுக்கு 77-வது நிமிடத்தில் அதிர்ஷ்டம் அடித்தது. சுலோவக்கியா கோல்கீப்பர் மார்ட்டின் டப்ரவிகா, சுவீடனின் ராபின் குவாசனை கீழே தள்ளியதால் சுவீடனுக்கு நடுவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த வாய்ப்பை  சுவீடன் வீரர் எமில் போர்ஸ்பெர்க் கச்சிதமாக கோலாக்கினார். அதுவே ஆட்டத்தின் முடிவையும் தீர்மானித்தது. சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியது. முந்தைய ஆட்டத்தில் ஸ்பெயினுடன் டிரா செய்த சுவீடனுக்கு இது முதலாவது வெற்றியாகும். தனது தொடக்க ஆட்டத்தில் போலந்தை வென்றிருந்த சுலோவக்கியாவுக்கு முதலாவது தோல்வியாகும். இரு அணிகளுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

இரவில் கிளாஸ்கோவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணி, செக்குடியரசை (டி பிரிவு) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

இன்றைய ஆட்டங்கள்
இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஹங்கேரி-பிரான்ஸ் (எப் பிரிவு, இந்திய நேரம்: மாலை 6.30 மணி), போர்ச்சுகல்- ஜெர்மனி (எப் பிரிவு, நேரம்: இரவு 9.30 மணி), ஸ்பெயின்-போலந்து (இ பிரிவு, நேரம்: நள்ளிரவு 12.30 மணி) அணிகள் 
மோதுகின்றன.

Next Story