கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி 2-வது வெற்றி


கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 19 Jun 2021 12:33 AM GMT (Updated: 19 Jun 2021 12:33 AM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

பிரேசில் கலக்கல்
தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். ரியோ டி ஜெனீரோவில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த பெருவை சந்தித்தது. வலுவான பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 12-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் அலெக்ஸ் சான்ட்ரோ கோல் அடித்தார்.

பிற்பாதியிலும் பிரேசில் அணியினர் எதிரணியின் கோல் பகுதியை நோக்கி அடிக்கடி படையெடுத்து தாக்குதல் தொடுத்தனர். இதன் பலனாக பிரேசில் வீரர்கள் நெய்மார் 68-வது நிமிடத்திலும், எவெர்டன் ரிபிரோ 89-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 90-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். பிரேசில் அணிக்காக நெய்மார் அடித்த 68-வது கோல் இதுவாகும். முடிவில் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் லீக் ஆட்டத்தில் வெனிசுலாவை வென்று இருந்தது. பிரேசில் அணி தனது கடைசி 9 சர்வதேச ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டம்
முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா-வெனிசுலா அணிகள் மோதின. இதில் முன்னாள் சாம்பியனான கொலம்பியா வீரர்களின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் (65 சதவீதம்) வலம் வந்தாலும் அந்த அணியால் கடைசி வரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்த ஆட்டம் கோலின்றி ‘டிரா’ வில் முடிந்தது. வெனிசுலா அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த அணியின் கோல்கீப்பர் பாரினெஸ் எதிரணியினர் கோலை நோக்கி அடித்த 8 ஷாட்களை அபாரமாக தடுத்து நிறுத்தி அணியை தோல்வியில் இருந்து தப்ப வைத்தார்.

கொலம்பியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஈகுவடாரை சாய்த்து இருந்தது. வெனிசுலா அணி முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் ‘சரண்’ அடைந்தது.

Next Story