ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணிக்கு மீண்டும் ஏமாற்றம் போலந்துக்கு எதிரான ஆட்டத்திலும் ‘டிரா’


ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணிக்கு மீண்டும் ஏமாற்றம் போலந்துக்கு எதிரான ஆட்டத்திலும் ‘டிரா’
x
தினத்தந்தி 20 Jun 2021 11:30 PM GMT (Updated: 20 Jun 2021 11:30 PM GMT)

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போலந்துக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்பெயின் அணி ‘டிரா’ கண்டு ஏமாற்றத்திற்குள்ளானது.

செவில்லி, 

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த நிலையில் ‘இ’ பிரிவில் செவில்லி நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய லீக் ஆட்டம் ஒன்றில் 3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி, போலந்தை எதிர்கொண்டது.

ஸ்பெயின் வீரர்கள் பெரும்பாலும் பந்தை தங்களுக்குள்ளே அதிகமாக தட்டிவிட்டு (பாஸ் செய்வது) விளையாடும் பாணிைய கடைபிடிக்கக்கூடியவர்கள். அந்த வகையில் இந்த ஆட்டத்திலும் 69 சதவீதம் பந்து இவர்கள் வசமே சுற்றிக்கொண்டிருந்தது. 25-வது நிமிடத்தில் சக வீரர் மோரெனோ தட்டிக்கொடுத்த பந்தை ஸ்பெயினின் அல்வரோ மோரட்டா அப்படியே கோலுக்குள் திரும்பினார். முதலில் இது ஆப்-சைடு கோல் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு வீடியோ பதிவு ஆய்வுக்கு பிறகு இது சரியான கோல் தான் என்று நடுவர் அறிவித்தார். இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் கடும் சவால் அளித்த போலந்து அணி 54-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. ஜோஸ்வியாக் கோல் நோக்கி தூக்கியடித்த பந்தை போலந்து நட்சத்திர வீரர் ராபர்ட் லெவான்டவ்ஸ்கி தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இதன் மூலம் மூன்று யூரோ தொடர்களில் கோல் போட்ட முதல் போலந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

58-வது நிமிடத்தில் மீண்டும் முன்னிலை பெற ஸ்பெயினுக்கு பொன்னான வாய்ப்பு கிட்டியது. பெனால்டி வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் ஜெராட் மோரெனோ பந்தை கோல் கம்பத்தின் மீது அடித்து வீணடித்து விட்டார். அதன் பிறகு கோல் நோக்கி உதைக்கப்பட்ட சில ஷாட்டுகளை போலந்து கோல் கீப்பர் வோஜ்சிச் சிஸ்சென்சி அருமையாக முறியடித்தார்.

முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ஏற்கனவே தனது தொடக்க ஆட்டத்தில் சுவீடனுடன் கோல் இன்றி ‘டிரா’ கண்டு இருந்த ஸ்பெயினுக்கு இது மற்றொரு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயின் தனது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெறாதது 1996-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும்.

‘இ’ பிரிவில் 4 அணிகளும் தலா 2 ஆட்டங்களில் ஆடிவிட்ட நிலையில் 4 அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

சுவீடன் 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுலோவக்கியா 3 புள்ளியுடன் 2-வது இடத்திலும், ஸ்பெயின் 2 புள்ளியுடன் 3-வது இடத்திலும், போலந்து ஒரு புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இந்த பிரிவின் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் நாளை மறுதினம் சுவீடன்-போலந்து, சுலோவக்கியா-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. 2-வது சுற்றுக்கு முன்னேற ஸ்பெயின் அணி தனது இறுதி லீக்கில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இன்று நடக்கும் ஆட்டங்களில் உக்ரைன்-ஆஸ்திரியா (சி பிரிவு, இந்திய நேரம்: இரவு 9.30 மணி), வடக்கு மாசிடோனியா-நெதர்லாந்து (சி பிரிவு, நேரம்: இரவு 9.30 மணி), பின்லாந்து-பெல்ஜியம் (பி பிரிவு, நள்ளிரவு 12.30 மணி), ரஷியா-டென்மார்க் (பி பிரிவு, நேரம்: நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story