ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியின் வெற்றி தொடருகிறது


ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியின் வெற்றி தொடருகிறது
x
தினத்தந்தி 21 Jun 2021 9:24 PM GMT (Updated: 21 Jun 2021 9:24 PM GMT)

ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி, வடக்கு மாசிடோனியாவை சந்தித்தது.

ஆம்ஸ்டர்டாம், 

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி, வடக்கு மாசிடோனியாவை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவை தோற்கடித்து தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. நெதர்லாந்து அணியில் மெம்பிஸ் 24-வது நிமிடத்திலும், ஜார்ஜினியோ 51-வது மற்றும் 58-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர்.

இதேபிரிவில் புச்சாரெஸ்டில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன்-ஆஸ்திரியா அணிகள் மல்லுக்கட்டின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. ஆஸ்திரியா அணி தரப்பில் கிறிஸ்டோப் பாம்கார்ட்னெர் 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

‘சி’ பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் நெதர்லாந்து அணி (3 வெற்றி) 9 புள்ளியுடன் முதலிடமும், ஆஸ்திரியா (2 வெற்றி, ஒரு தோல்வி) 6 புள்ளியுடன் 2-வது இடமும் பிடித்து அடுத்த சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறின. உக்ரைன் அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்புக்காக காத்து இருக்கிறது. 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட வடக்கு மாசிடோனியா அணி வெளியேறியது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் செக்குடியரசு-இங்கிலாந்து (டி பிரிவு, இந்திய நேரம்: நள்ளிரவு 12.30 மணி), குரோஷியா-ஸ்காட்லாந்து (டி பிரிவு, நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story