கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா அணி கால்இறுதிக்கு தகுதி


கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா அணி கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 23 Jun 2021 12:12 AM GMT (Updated: 2021-06-23T05:42:17+05:30)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

பிரேசிலியா,

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

பிரேசிலியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா-பராகுவே அணிகள் மோதின. அர்ெஜன்டினா கேப்டன் லயோனல் மெஸ்சிக்கு இது 147-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அதிக ஆட்டங்களில் ஆடியவரான ஜாவியர் மாஸ்செரனோவின் சாதனையை சமன் செய்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ ஆகியோருக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளில் பந்தை கோல் கம்பத்துக்கு மேல்வாக்கில் அடித்து வீணடித்தனர். 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கோல் போட்டது. சக வீரர் ஏஞ்சல் டி மரியா கடத்தி கொடுத்த பந்தை முன்கள வீரர் அலெஜான்ட்ரோ டாரியோ கோமெஸ் கோல் வலைக்குள் திணித்தார். பராகுவே அணி பதிலடி கொடுக்க தீவிரமாக முயற்சித்தாலும், கடைசி வரை அர்ஜென்டினா அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய அர்ஜென்டினா 2 வெற்றி, ஒரு ‘டிரா’வுடன் 7 புள்ளிகள் பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தனது கடைசி லீக்கில் பொலிவியாவை எதிர்கொள்கிறது.

இதே பிரிவில் நடந்த சிலி-உருகுவே அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சிலி அணி ஒரு வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகள் பெற்று இருப்பதுடன், கால்இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. சிலி அணி தனது கடைசி லீக்கில் பராகுவேயை சந்திக்கிறது.

Next Story