ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ரஷியாவை விரட்டியடித்து அடுத்த சுற்றை எட்டியது டென்மார்க்


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ரஷியாவை விரட்டியடித்து அடுத்த சுற்றை எட்டியது டென்மார்க்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:39 AM GMT (Updated: 2021-06-23T06:09:34+05:30)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை விரட்டியடித்து அடுத்த சுற்றை எட்டியது.

கோபன்ஹேகன்,

24 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நேற்று முன்தினம் இரவு ‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியம், பின்லாந்தை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த பெல்ஜியம் வீரர்கள் தொடக்கம் முதலே இடைவிடாது எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட்டு நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும் பின்லாந்தின் தடுப்பாட்ட யுக்திைய அவ்வளவு எளிதில் உடைக்க முடியவில்லை. முதல் 65 நிமிடத்திற்குள் பெல்ஜியம் அணியினர் இலக்கை நோக்கி துல்லியமாக அடித்த 6 ஷாட்டுகளை பின்லாந்து கோல் கீப்பர் லுகாஸ் ஹராடெக்கி முறியடித்தார்.

66-வது நிமிடத்தில் பெல்ஜியம் நட்சத்திர வீரர் ரோம்லு லுகாகு அடித்த கோல் ‘ஆப்-சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்திற்கு உள்ளானார். 74-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் வெர்மாலென் தலையால் முட்டித் தள்ளிய பந்து கம்பத்தில் பட்டு கோல் லைனுக்கு சற்று வெளியே விழுந்தது. அதை தடுக்க முற்பட்ட பின்லாந்து கோல் கீப்பர் ஹராடெக்கி தவறுதலாக வலைக்குள் தள்ளிவிட்டு விட்டார். இதனால் இது சுயகோலாக மாறியது. 81-வது நிமிடத்தில் சக வீரர் கெவின் டி புருனே தட்டிக்கொடுத்த பந்தை ரோம்லு லுகாகு பின்லாந்தின் பின்கள வீரர்களுக்கு போக்குகாட்டி விட்டு வலைக்குள் அழகாக செலுத்தினார். நடப்பு தொடரில் அவரது 3-வது கோல் இதுவாகும். முடிவில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. யூரோ போட்டியில் பெல்ஜியம் அணி லீக்கில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி காண்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

இதே பிரிவில் கோபன்ஹேகன் நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் அணி, ரஷியாவுடன் மோதியது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய டென்மார்க் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்துடன் களம் புகுந்தது. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் தாக்குதல் பாணியை தொடுத்த டென்மார்க் வீரர்கள் வசமே (61 சதவீதம்) பந்து அதிகமாக வலம் வந்தது. இலக்கை நோக்கி அடிக்கடி ஷாட் அடித்தாலும் 38-வது நிமிடத்தில் தான் பலன் கிட்டியது. அந்த அணியின் டாம்ஸ்காா்டு முதல் ேகால் அடித்தார். தொடர்ந்து 58-வது நிமிடத்தில் யூசுப் போல்செனும், 79-வது நிமிடத்தில் ஆன்ட்ரீயாஸ் கிறிஸ்டன்செனும், 82-வது நிமிடத்தில் ஜோகிம் மாலேவும் டென்மார்க் அணிக்காக கோல் போட்டு எதிரணியை நிலைகுலைய வைத்தனர். இதில் கிறிஸ்டன்சென் 30 மீட்டர் தூரத்தில் இருந்து உதைத்த பந்து ரஷிய வீரர்கள் வேடிக்கை பார்க்க வலைக்குள் நுழைந்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இதற்கிடையே 70-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ரஷிய கேப்டன் ஆர்டெம் ஜூயூபா ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் டென்மார்க் 4-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை பந்தாடியது.

‘பி’ பிரிவில் லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த பெல்ஜியம் 9 புள்ளிகளுடன் ஏற்கனவே 2-வது சுற்றை (நாக்-அவுட்) எட்டி விட்டது. டென்மார்க், பின்லாந்து, ரஷியா ஆகிய மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, 2 தோல்வி என்று 3 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. கோல் வித்தியாசம் அடிப்படையில் டென்மார்க் 2-வது சுற்று அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது. யூரோ கால்பந்து வரலாற்றில் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோற்று அதன் பிறகு நாக்-அவுட் சுற்றுக்குள் கால்பதித்த முதல் அணி டென்மார்க் தான். 2004-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு வந்துள்ளது.

கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட ரஷியா வெளியேற்றப்பட்டது. இந்த பிரிவில் 3-வது இடத்தை பிடித்த பின்லாந்துக்கு நாக்-அவுட் சுற்று வாய்ப்பு கிடைக்குமா? என்பது எல்லா பிரிவின் ஆட்டங்களும் முடிந்த பிறகு தெரியவரும்.

இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் சுவீடன்-போலந்து (இ பிரிவு, இந்திய நேரம்: இரவு 9.30 மணி), சுலோவக்கியா-ஸ்பெயின் (இ பிரிவு, நேரம்: இரவு 9.30 மணி), ஜெர்மனி-ஹங்கேரி (எப் பிரிவு, நேரம்: நள்ளிரவு 12.30 மணி), போர்ச்சுகல்- பிரான்ஸ் (எப் பிரிவு, நேரம்: நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story