ஐரோப்பிய கால்பந்து போட்டி: அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து, குரோஷியா அணிகள் தகுதி


ஐரோப்பிய கால்பந்து போட்டி: அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து, குரோஷியா அணிகள் தகுதி
x
தினத்தந்தி 24 Jun 2021 1:30 AM GMT (Updated: 2021-06-24T07:00:25+05:30)

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, குரோஷியா, செக்குடியரசு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.

லண்டன்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் என மொத்தம் 16 அணிகள் 2-வது சுற்றான ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் லண்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-செக்குடியரசு அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கடைப்பிடித்தது. 2-வது நிமிடத்தில் பந்தை கோல் கம்பத்தில் அடித்து வீணாக்கிய இங்கிலாந்து அணியின் முன்கள வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் 12-வது நிமிடத்தில் கோல் அடித்து பரிகாரம் தேடிக்கொண்டார். சக வீரர் ஜாக் கிரிலிஷ் கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை தலையால் முட்டி அவர் கோலாக்கினார்.

செக்குடியரசு வீரர்கள் தாமஸ் ஹேல்ஸ், தாமஸ் சுசெக் ஆகியோர் பதில் கோல் திருப்ப அடித்த ஷாட்களை இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டார் பிக்போர்ட் அருமையாக தடுத்து நிறுத்தினார். இங்கிலாந்து அணியின் மாற்று ஆட்டக்காரர் ஜோர்டான் ஹென்டெர்சன் 86-வது நிமிடத்தில் அடித்த கோல் ‘ஆப்-சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

இதே பிரிவில் கிளாஸ்கோவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் குரோஷியா-ஸ்காட்லாந்து அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குரோஷியா 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. குரோஷியா அணியில் நிகோலா வாசிச் 17-வது நிமிடத்திலும், லூகா மோட்ரிச் 62-வது நிமிடத்திலும், இவான் பெர்சிச் 77-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

‘டி’ பிரிவில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து 2 வெற்றி, ஒரு டிரா என்று 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறியது. ஒரு டிரா, 2 தோல்வியுடன் 1 புள்ளி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட ஸ்காட்லாந்து வெளியேறியது. குரோஷியா, செக்குடியரசு அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய ஆட்டம் டிராவில் (1-1) முடிந்து இருந்ததால் 2-வது இடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்க கோல் வித்தியாசம் (அடித்த கோல், வாங்கிய கோல்) கணக்கில் கொள்ளப்பட்டது. அதிலும் இரு அணிகளும் (+1 கோல்) சரிசமமாக இருந்தன. இதனால் அதிக கோல் அடித்த அணி என்ற அடிப்படையில் குரோஷியா (4 கோல்கள்) 2-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. செக்குடியரசு அணி (3 கோல்கள்) 3-வது இடத்தை பிடித்தாலும், அதில் சிறந்த அணி என்ற முறையில் அடுத்த சுற்று அதிர்ஷ்டத்தை பெற்றது.

இந்த போட்டி தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். அடுத்த சுற்றான நாக்-அவுட் ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

Next Story