கோபா அமெரிக்கா கால்பந்து சர்ச்சைக்குரிய கோலுடன் கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்


கோபா அமெரிக்கா கால்பந்து சர்ச்சைக்குரிய கோலுடன் கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்
x
தினத்தந்தி 24 Jun 2021 10:05 PM GMT (Updated: 24 Jun 2021 10:05 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சர்ச்சைக்குரிய கோலின் உதவியுடன் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது.

ரியோடிஜெனீரோ,

10 அணிகள் இடையிலான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ரியோடிஜெனீரோவில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி, முன்னாள் சாம்பியனான கொலம்பியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கொலம்பியா 10-வது நிமிடத்தில் கோல் அடித்து பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. கொலம்பியாவின் ஜூவன் குவாட்ராடோ கோல் எல்லையை நோக்கி தூக்கியடித்த பந்தை சக வீரர் லூயிஸ் டையாஸ் அந்தரத்தில் பல்டி அடித்த நிலையில் அற்புதமாக ஷாட் (பைசைக்கிள் கிக்) அடித்து கோலாக்கி அனைவரையும் வியக்க வைத்தார். கடந்த 6 ஆட்டங்களுக்கு பிறகு பிரேசில் அணி வாங்கிய முதல் கோல் இதுவாகும்.

78-வது நிமிடத்தில் பிரேசில் அணி சர்ச்சைக்குரிய வகையில் கோல் அடித்தது. பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் அடித்த பந்து நடுவர் நெஸ்டர் பிடானா (அர்ஜென்டினா) உடம்பில் பட்டு திரும்பியது. ஆனால் நடுவர் பந்தை நிறுத்தி விட்டு, ஆட்டத்தை தொடரும்படி சொல்லாமல் அப்படியே விளையாட அனுமதித்தார். எதிரணியினரின் கவனம் சற்று சிதறிய அந்த சமயத்தில் பந்தை தன்வசப்படுத்திய பிரேசில் அணியின் மாற்று ஆட்டக்காரர் ரெனான் லோடி அதனை கோல் பகுதியை நோக்கி அடிக்க, அதை சக வீரர் ராபர்டோ பிர்மினோ தலையால் முட்டி கோல் வலையை நோக்கி திருப்பினார். பந்தை கொலம்பியா கோல்கீப்பர் டேவிட் ஆஸ்பினா கையால் தடுத்தும் நழுவி வலைக்குள் புகுந்தது. இந்த கோலுக்கு கொலம்பியா வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆட்டம் சில நிமிடம் பாதிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து நடந்தது. கடைசி நிமிடத்தில் பிரேசில் மேலும் ஒரு கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில்கொலம்பியாவை வீழ்த்தியது.

இதே பிரிவில் நடந்த ஈகுவடார்-பெரு அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

‘பி’ பிரிவில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை ருசித்த பிரேசில் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் ஏற்கனவே கால்இறுதிக்கும் தகுதி பெற்று விட்டது.

Next Story