ஐரோப்பிய கால்பந்து போட்டி: 2-வது சுற்றில் இத்தாலி-ஆஸ்திரியா அணிகள் இன்று மோதல் - மற்றொரு ஆட்டத்தில் வேல்ஸ்-டென்மார்க் சந்திப்பு


ஐரோப்பிய கால்பந்து போட்டி: 2-வது சுற்றில் இத்தாலி-ஆஸ்திரியா அணிகள் இன்று மோதல் - மற்றொரு ஆட்டத்தில் வேல்ஸ்-டென்மார்க் சந்திப்பு
x
தினத்தந்தி 26 Jun 2021 1:46 AM GMT (Updated: 2021-06-26T07:16:20+05:30)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடக்கும் 2-வது சுற்றில் இத்தாலி-ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன.

லண்டன்,

16-வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) 11 நகரங்களில் நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) தகுதி பெற்றுள்ளன. நாக்-அவுட் சுற்றில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

இந்த நிலையில் 2-வது சுற்றில் இன்று (சனிக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் வேல்ஸ் அணி, டென்மார்க்கை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் வேல்ஸ் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தையும் (4 புள்ளி), டென்மார்க் ‘பி’ பிரிவில் 2-வது இடத்தையும் (3 புள்ளி) பிடித்த அணிகளாகும். ஏறக்குறைய சரிசம பலத்துடன் இரு அணிகளும் இருப்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்த 10 ஆட்டங்களில் 6-ல் டென்மார்க்கும், 4-ல் வேல்சும் வெற்றி கண்டுள்ளன.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த இத்தாலி அணி, ஆஸ்திரியாவை சந்திக்கிறது. இத்தாலி லீக் சுற்றில் துருக்கி, சுவிட்சர்லாந்து, வேல்ஸ் ஆகிய 3 அணிகளையும் துவம்சம் செய்ததுடன் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் கம்பீரமாக 2-வது சுற்றுக்குள் வந்துள்ளது. அது மட்டுமின்றி கடைசியாக ஆடிய 30 சர்வதேச போட்டிகளில் அந்த அணி தோற்றதில்லை. மானுல் லோகாடெலி, லியோனர்டோ போனுக்சி, இம்மொபைல் உள்ளிட்ட வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர். காயத்தால் முந்தைய ஆட்டத்தில் ஆடாத இத்தாலி கேப்டன் செலினி இன்றைய ஆட்டத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளது. வலுவான இத்தாலி அணி இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றிகண்டு கால் இறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சி’ பிரிவில் அங்கம் வகித்து 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 6 புள்ளிகளுடன் முதல்முறையாக 2-வது சுற்றை எட்டியுள்ள ஆஸ்திரியா அணி அதிர்ச்சி அளிக்க வரிந்து கட்டும். 1960-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி இத்தாலியை வீழ்த்தியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இது நாக்-அவுட் சுற்று என்பதால் வெற்றி-தோல்வி முடிவு அவசியமாகும். அதனால் வழக்கமான 90 நிமிடங்களில் ஆட்டம் சமனில் முடிந்தால் அதன் பிறகு தலா 15 நிமிடம் வீதம் இரண்டு முறை கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதிலும் வெற்றியாளரை தீர்மானிக்க முடியவில்லை என்றால் போட்டி பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு ஆட்டங்களையும் சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story