குரோஷியாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்


குரோஷியாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2021 12:29 AM GMT (Updated: 29 Jun 2021 12:29 AM GMT)

குரோஷியாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

கோபன்ஹேகன்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக 20-வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு முதல் கோல் வந்தது. ஸ்பெயின் அணியின் நடுகள வீரர் பெட்ரி தங்களது கோல் கீப்பர் சிமோனை நோக்கி பாஸ் செய்த பந்தை அவர் கவனக்குறைவாக தடுக்காமல் விட்டதால் அது சுய கோலானது. அதன் பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெயின் அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. அந்த அணியின் பாப்லோ சராபியா 38-வது நிமிடத்திலும், சீசர் 57-வது நிமிடத்திலும், பெர்ரன் டோரஸ் 76-வது நிமிடத்திலும் கோலடித்து முன்னிலை தேடிக் கொடுத்தனர். கடைசி 5 நிமிடத்தில் குரோஷியா அணி 2 கோல்களை போட்டது. அந்த அணியின் மிஸ்லாவ் ஒர்சிச் 85-வது நிமிடத்திலும், மரியோ பாசாலிச் 90-வது நிமிடத்திலும் இந்த கோலை திருப்பினர். இதனால் வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஸ்பெயின் அணி வீரர்கள் அல்வரோ மோராடா 100-வது நிமிடத்திலும், மிகெல் 103-வது நிமிடத்திலும் கோலடித்தனர். முடிவில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டது.

Next Story