கோபா அமெரிக்கா கால்பந்து பிரேசிலுடன் டிரா கண்டது ஈகுவடார்


கோபா அமெரிக்கா கால்பந்து பிரேசிலுடன் டிரா கண்டது ஈகுவடார்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:47 AM GMT (Updated: 29 Jun 2021 1:47 AM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில், ஈகுவடார் ஆட்டம் டிராவில் முடிந்தது.

பிரேசில்லா,

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் கோய்னியாவில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், கால்இறுதியை உறுதி செய்து விட்ட பிரேசில் அணி, ஈகுவடாரை எதிர்கொண்டது. பிரேசில் அணியில் நெய்மார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த போட்டியில் பிரேசில் அணி தொடக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்தியது. ஆரம்பத்தில் அந்த அணி வீரர் கேப்ரியல் பார்போசா அடித்த அருமையான ஷாட்டை ஈகுவடார் கோல் கீப்பர் ஹெர்னன் காலின்டெஸ் அபாரமாக தடுத்தார். 37-வது நிமிடத்தில் பிரேசில் அணி கோல் அடித்தது. பிரிகிக் வாய்ப்பில் சக வீரர் எவர்டன் செபலின்கா கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை எடர் மிலிட்டோ தலையால் முட்டி கோலாக்கினார்.

பின்பாதியில் பதிலடி கொடுக்க ஈகுவடார் அணி ஆக்ரோஷமாக ஆடி நெருக்கடி அளித்தது. அதன் பலனாக 53-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மாற்று ஆட்டக்காரர் ஏஞ்சல் மினா கோல் அடித்தார். இதனால் சமநிலை (1-1) ஏற்பட்டது.

அதன் பிறகு பிரேசில் அணிக்கு கோல் அடிக்க சில நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், அதனை அந்த அணி வீரர்கள் வீணடித்தனர். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் கடந்த 10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று இருந்த பிரேசிலின் வெற்றிப்பயணத்துக்கு ஈகுவடார் அணி முட்டுக்கட்டை போட்டது.

இதேபிரிவில் பிரேசில்லாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெரு அணி, வெனிசுலாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தியது. பெரு அணி வீரர் ஆந்த்ரே காரில்லோ 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதுவே வெற்றியை நிர்ணயிக்கும் கோலாக அமைந்தது.

‘பி’ பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் பிரேசில் (3 வெற்றி, ஒரு டிரா) 10 புள்ளியுடன் முதலிடமும், பெரு (2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 7 புள்ளியுடன் 2-வது இடமும், கொலம்பியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி) 4 புள்ளியுடன் 3-வது இடமும், ஈகுவடார் (3 டிரா, ஒரு தோல்வி) 3 புள்ளியுடன் 4-வது இடமும் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின. வெனிசுலா அணி 2 டிரா, 2 தோல்வியுடன் 2 புள்ளி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

Next Story