ஐரோப்பிய கால்பந்து போட்டி: போர்ச்சுகல் அணியை வெளியேற்றி பெல்ஜியம் கால்இறுதிக்கு தகுதி


ஐரோப்பிய கால்பந்து போட்டி: போர்ச்சுகல் அணியை வெளியேற்றி பெல்ஜியம் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 29 Jun 2021 1:49 AM GMT (Updated: 29 Jun 2021 1:49 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகலை வீழ்த்தி பெல்ஜியம் அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

செவில்லி,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியில் 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) நடந்து வருகிறது.

இதில் ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம்-நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியதுடன், எதிரணியின் தவறை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் தாக்குதல் பாணியையும் தொடுத்தனர். 25-வது நிமிடத்தில் கிடைத்த பிரிகிக் வாய்ப்பில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த அற்புதமான ஷாட் வரிசையாக தடுப்பு அரணாக நின்ற வீரர்களை தாண்டி கோல் வலையத்தை நோக்கி சென்றது. அதனை பெல்ஜியம் அணியின் கோல்கீப்பர் திபாட் கோட்வா லாவகமாக தடுத்தார்.

42-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் தோர்கன் ஹசார்ட் பெனால்டி பகுதிக்கு வெளியில் இருந்து வலுவாக அடித்த பந்து ராக்கெட் வேகத்தில் கோல் வலைக்குள் புகுந்தது. போர்ச்சுகல் கோல்கீப்பர் ருய் பாட்ரிசியோ தாவி குதித்து அந்த பந்தை தடுக்க எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிட்டவில்லை.

பின்பாதியில் பதில் கோல் திருப்ப போர்ச்சுகல் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ரொனால்டோ மீண்டும் பிரிகிக் வாய்ப்பில் கோல் அடிக்க எடுத்த முயற்சியை எதிரணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் தகர்த்தனர். இதேபோல் அந்த அணியின் ரபெல், ஆந்த்ரே சில்வா ஆகியோர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் மயிரிழையில் நழுவிப் போனது.

கடைசி கட்டத்தில் இரு அணியினரும் பந்தை கடத்தி செல்லும் வீரர்களின் காலை இடறிவிட்டு பவுல் செய்தனர். இதனால் வீரர்களுக்குள் லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. முரட்டு ஆட்டம் காரணமாக இரு அணிகளிலும் தலா 2 வீரர்கள் நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

தாக்குதல் ஆட்ட வேகத்தை தீவிரப்படுத்தினாலும் போர்ச்சுகல் அணியினரால் இறுதி வரை பெல்ஜியம் அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. முடிவில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறியது. 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு பெல்ஜியம் அணி போர்ச்சுகலை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். கால்இறுதியில் பெல்ஜியம் அணி, இத்தாலியை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து ஒட்டுமொத்த சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்தவரான ஈரானின் அலி டாயின் (109 கோல்கள்) சாதனையை ரொனால்டோ முறியடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து-ஜெர்மனி (இடம்: லண்டன், இந்திய நேரம்: இரவு 9.30 மணி), சுவீடன்-உக்ரைன் (இடம்:கிளாஸ்கோ, இந்திய நேரம்: நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story