கோபா அமெரிக்கா கால்பந்து: மெஸ்சி அசத்தலால் அர்ஜென்டினா அபார வெற்றி


கோபா அமெரிக்கா கால்பந்து: மெஸ்சி அசத்தலால் அர்ஜென்டினா அபார வெற்றி
x
தினத்தந்தி 30 Jun 2021 3:21 AM GMT (Updated: 30 Jun 2021 3:21 AM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

ரியோடிஜெனீரோ,

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குய்பாவில் நடந்த ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்கனவே கால்இறுதியை உறுதி செய்து விட்ட அர்ஜென்டினா அணி, பொலிவியாவை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினாவின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் வலம் வந்தது. 6-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் கோமெஸ் வலைக்குள் திணித்தார்.

இதன் பின்னர் 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்த மெஸ்சி 42-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு மிரட்டினார். தொடர்ந்து 65-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மார்ட்டினஸ் 4-வது கோலை அடித்தார். முன்னதாக பொலிவியா வீரர் எர்வின் சாவிட்ரா 60-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் திருப்பினார். முடிவில் அர்ஜென்டினா 4-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்தது.

இந்த ஆட்டத்தின் மூலம் 34 வயதான மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக அதிக சர்வதேச போட்டியில் (148 ஆட்டம்) விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு அந்த அணிக்காக ஜாவியர் மாஸ்செரானோ 147 போட்டியில் ஆடியதே அதிகபட்சமாக இருந்தது.

அத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை (74 கோல், 118 ஆட்டம்) பின்னுக்கு தள்ளிய மெஸ்சி (75 கோல்கள்) 3 வீரர்களுடன் இணைந்து 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 15 முறை சாம்பியனான உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. உருகுவே வீரர் எடிசன் கவானி 21-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

‘ஏ’ பிரிவில் லீக் சுற்று முடிவில் அர்ஜென்டினா (10 புள்ளி), உருகுவே (7 புள்ளி), பராகுவே (6 புள்ளி), சிலி (5 புள்ளி) முறையே முதல் 4 இடங்களை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின. பொலிவியா அணி புள்ளி கணக்கை தொடங்காமலேயே வெளியேறியது.

கால்இறுதி ஆட்டங்கள் 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் நடக்கிறது. இதில் பெரு-பராகுவே, பிரேசில்-சிலி, உருகுவே-கொலம்பியா, அர்ஜென்டினா-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

Next Story