ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: உலக சாம்பியன் பிரான்ஸ் அணி வெளியேற்றம்


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: உலக சாம்பியன் பிரான்ஸ் அணி வெளியேற்றம்
x
தினத்தந்தி 30 Jun 2021 3:31 AM GMT (Updated: 2021-06-30T09:01:57+05:30)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் உலக சாம்பியனான பிரான்ஸ் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் சுவிட்சர்லாந்திடம் வீழ்ந்தது.

புச்சாரெஸ்ட்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) ேபாட்டியில் 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் ருமேனியாவின் புச்சாரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய இரண்டாவது சுற்றில் உலக சாம்பியனும், 2-ம் நிலை அணியுமான பிரான்ஸ், தரவரிசையில் 13-வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்துடன் மோதியது. பலம் வாய்ந்த பிரான்சுக்கு எதிராக அச்சமின்றி ஆடிய சுவிட்சர்லாந்து வீரர்கள், எல்லா வகையிலும் ஈடுகொடுத்து மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. 15-வது நிமிடத்தில் சக வீரர் ஜூபெர் தட்டிக்கொடுத்த பந்தை சுவிட்சர்லாந்தின் ஹாரிஸ் செபரோவிச் துள்ளிகுதித்து தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு பிரான்சின் சில வாய்ப்புகள் நழுவிப்போன நிலையில் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து முன்னிலை வகித்தது.

55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சுவிட்சர்லாந்து வீணடித்தது. பெனால்டியில் ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ் தடுத்து காப்பாற்றினார். இதன் பிறகு பிரான்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து முற்றுகையிட்டு கோல்கள் பொழிந்தனர். 57 மற்றும் 59-வது நிமிடத்தில் கரிம் பெஞ்சிமா கோல் போட்டார். 75-வது நிமிடத்தில் பால் போக்பா 20 மீட்டர் தூரத்தில் இருந்து உதைத்த பந்து சுழன்றடித்து பிரமாதமாக வலைக்குள் புகுந்தது. இதனால் பிரான்ஸ் 3-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

‘இனி நமக்கு தான் வெற்றிக்கனி’ என்பது போல் பிரான்ஸ் வீரர்கள் இறுதி கட்டத்தில் சற்று மிதப்பில் விளையாட, கடைசி 10 நிமிடங்களில் அவர்களின் தலைவிதியை சுவிட்சர்லாந்து வீரர்கள் மாற்றிக்காட்டினர். 81-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் செபரோவிச்சும், 90-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் மரியோ காவ்ரானோவிச்சும் பந்தை வலைக்குள் அனுப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர். இதற்கு மத்தியில் 85-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அடித்த ஒரு கோல் ஆப்-சைடு கோல் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கடைசி வினாடிகளில் பிரான்ஸ் வீரர் கோமன் அடித்த நல்ல ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.

பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. யூரோ கால்பந்தில் ‘நாக்-அவுட்’ சுற்றில் பிரான்ஸ் 3 கோல்கள் விட்டுக்கொடுத்தது 1960-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். இதையடுத்து கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் பிரான்சின் இரண்டு சூப்பர் ஷாட்டுகளை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமெர் அருமையாக முறியடித்தார்.

இதைத் தொடர்ந்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு ஆட்டம் சென்றதால் டென்ஷன் எகிறியது. இதில் ஒவ்வொரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தங்களுக்குரிய முதல் 5 வாய்ப்புகளையும் சுவிட்சர்லாந்து வீரர்கள் கோலாக்கினர். பிரான்ஸ் தரப்பில் முதல் 4 வாய்ப்பை கோலாக மாற்றினர். 5-வது வாய்ப்பில் பிரான்சின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே உதைத்த பந்தை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சோமெர் வலது பக்கமாக பாய்ந்து விழுந்து தடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

திரிலிங்கான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் சுவிட்சர்லாந்து அணி 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது. யூரோ கால்பந்து வரலாற்றில் சுவிட்சர்லாந்து அணி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த பிரான்ஸ் அணியினர் வழக்கமான நேரத்தில் 2 கோல்கள் முன்னிலை பெற்றிருந்த போதிலும் தடுப்பாட்ட யுக்தியில் கோட்டைவிட்டதால் இப்போது நடைைய கட்டியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து கேப்டன் கிரானிட் ஸாகா ‘இது வியப்புக்குரிய வெற்றி. வரலாறு படைத்து விட்டோம், நாங்கள் எல்லோரும் பெருமிதம் கொள்கிறோம்’ என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார்.

தோல்விக்கு பிறகு பிரான்ஸ் பயிற்சியாளர் டிடெர் டேஸ்சாம்ப்ஸ் கூறுகையில், ‘இந்த தோல்வி எங்களை காயப்படுத்தி விட்டது. ஆனால் அதை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இது தான் கால்பந்து விளையாட்டு. வீரர்களின் அறையில் ஒவ்வொருவரும் வேதனையில் உள்ளனர். ஆனாலும் இந்த கடினமான தருணத்தில் ஒட்டுமொத்த அணியும் ஒற்றுமையுடன் உள்ளது. எம்பாப்பே இந்த தொடரில் ஒரு கோல் கூட அடிக்காவிட்டாலும் மற்றவர்கள் கோல் அடிக்க உதவி புரிந்திருக்கிறார். எந்த வீரரும் அவர் மீது கோபத்தில் இல்லை. நீ தான் தவறு செய்து விட்டாய் என்று யாரும் சொல்லவில்லை. தனது பொறுப்பு என்ன என்பது எம்பாப்ேவக்கு தெரியும்’ என்றார்.

முன்னதாக நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை சாய்த்து கால்இறுதியை எட்டியது. யூரோ தொடரில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை ஸ்பெயின் (முந்தைய லீக்கில் 5-0 என்ற கணக்கில் சுலோவக்கியாவை பந்தாடியிருந்தது) பெற்றது. வருகிற 2-ந்தேதி ெசயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கும் கால்இறுதியில் சுவிட்சர்லாந்து அணி, ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

Next Story