ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: கால்இறுதியில் இத்தாலி-பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: கால்இறுதியில் இத்தாலி-பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 2 July 2021 12:55 AM GMT (Updated: 2 July 2021 12:55 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இத்தாலி-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முனிச், 

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த உலக சாம்பியன் பிரான்ஸ், நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், 3 முறை சாம்பியனான ஜெர்மனி ஆகிய அணிகள் 2-வது சுற்றுடன் மண்ணை கவ்வின.

இந்த நிலையில் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் முதலாவது கால்இறுதி சுற்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது.

யூரோ கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக கால்இறுதிக்குள் வந்துள்ள சுவிட்சர்லாந்து அணி, முந்தைய சுற்றில் பிரான்சை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணும். ஆனால் இரண்டு மஞ்சள் அட்டை பெற்ற அந்த அணியின் கேப்டன் கிரானிட் ஸாகா ஆட முடியாமல் போவது கொஞ்சம் பின்னடைவாகும்.

முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் சுலோவக்கியா மற்றும் குரோஷியாவுக்கு எதிராக தலா 5 கோல்கள் போட்டு மிரள வைத்தது. பொதுவாக பந்தை தங்களுக்குள்ளே அதிக நேரம் வைத்துக் கொள்ளும் வகையில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் ஸ்பெயின் அணியினர் இப்போது தாக்குதல் பாணியை கையில் எடுத்திருப்பது எதி்ாபார்ப்பை உருவாக்கியுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 16-ல் ஸ்பெயினும், ஒன்றில் சுவிட்சர்லாந்தும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது. சுவிட்சர்லாந்துக்கு அந்த ஒரே ஒரு வெற்றி 2010-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கிடைத்தது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு முனிச் நகரில் அரங்கேறும் மற்றொரு கால் இறுதியில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம், 4 முறை உலக சாம்பியனான இத்தாலியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங் களிலும் வெற்றி கண்டு தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன.

விசுவரூபம் எடுத்துள்ள இத்தாலி அணி கடைசி 31 சர்வதேச போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறது. அந்த அணியில் லியானர்டோ போனுக்சி, மானுல் லோகடெலி, இம்மொபைல், இன்சைஜ், பெடரிகோ சீஸா, பெசினா உள்ளிட்டோர் சூப்பர் பார்மில் உள்ளனர்.

அதே சமயம் பெல்ஜியம் அணிக்கு திடீர் பின்னடைவாக நடுகள வீரர் கெவின் டி புருனே, கேப்டன் ஈடன் ஹசார்ட் காயத்தில் சிக்கியுள்ளனர். நேற்று பயிற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் அவர்கள் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இருப்பினும் முந்தைய சுற்றில் கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகலை பதம் பார்த்ததால் அதே உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள். ரோம்லு லுகாகு (3 கோல்), தோர்ஹன் ஹசார்ட், ஆக்சல் விட்செல் நம்பிக்கை அளிக்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். 1980-ம் ஆண்டுக்கு பிறகு பெல்ஜியம் அணி யூரோ கால்பந்தில் அரைஇறுதியை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் 22 முறை இதற்கு முன்பு மோதியுள்ளன. இதில் 4-ல் பெல்ஜியமும், 14-ல் இத்தாலியும் வெற்றி கண்டன. 4 ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த போட்டிகளை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story