ஐரோப்பிய கால்பந்து கால்இறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது, உக்ரைன்


ஐரோப்பிய கால்பந்து கால்இறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது, உக்ரைன்
x
தினத்தந்தி 3 July 2021 2:04 AM GMT (Updated: 2021-07-03T07:34:47+05:30)

ஐரோப்பிய கால்பந்து திருவிழாவில் இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து-உக்ரைன், டென்மார்க்-செக்குடியரசு அணிகள் மோதுகின்றன.

ரோம்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு பாகு நகரில் நடக்கும் ஒரு கால்இறுதியில் செக்குடியரசு அணி, டென்மார்க்கை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் ‘டி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்து பெரும்பாடுபட்டு அடுத்த சுற்றை எட்டிய செக்குடியரசு அணி 2-வது சுற்றில் நெதர்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் விரட்டியடித்தது. பாட்ரிக் சீக் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். இதுவரை 4 கோல்கள் அடித்துள்ள அவர் ‘தங்க ஷூ’ விருதுக்காக அதிக கோல் அடித்தவா்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரொனால்டோவை (5 கோல்) பின்னுக்கு தள்ளுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டென்மார்க் அணியை எடுத்துக் கொண்டால் லீக் சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் தோற்று அதன் பிறகு கடைசி லீக்கில் ரஷியாவை வீழ்த்தி தட்டுத்தடுமாறித் தான் 2-வது சுற்றுக்கு முன்னேறியது. 2-வது சுற்றில் வேல்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடி எழுச்சி பெற்றது.

ஏறக்குறைய சரிசம பலத்துடன் உள்ள இவ்விரு அணிகளும் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் டென்மார்க்கும், 3-ல் செக்குடியரசும் வெற்றி பெற்றன. 6 ஆட்டம் டிரா ஆனது.

ரோம் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் மற்றொரு கால்இறுதியில் இங்கிலாந்து அணி, உக்ரைனை சந்திக்கிறது.

கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக திகழும் இங்கிலாந்து நடப்பு தொடரில் ஒரு கோல் கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்கவில்லை. 2-வது சுற்றில் அந்த அணி முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை சாய்த்தது, அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

கேப்டன் ஹாரி கேன், ரஹீம் ஸ்டொ்லிங் (3 கோல்) கலக்கலாக ஆடி வருகிறார்கள். இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு தூக்கலாக தென்படுகிறது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழையும் முனைப்புடன் இங்கிலாந்து வியூகங்களை தீட்டி வருகிறது.

அதே சமயம் முதல்முறையாக கால்இறுதிக்கு வந்துள்ள உக்ரைன் அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் ‘வேட்டு’ வைக்கும் திறமை கொண்டது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 4-ல் இங்கிலாந்தும், ஒன்றில் உக்ரைனும் வென்றுள்ளன. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

Next Story