ஐரோப்பிய கால்பந்து அரைஇறுதியில் இத்தாலி-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை


ஐரோப்பிய கால்பந்து அரைஇறுதியில் இத்தாலி-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 5 July 2021 11:25 PM GMT (Updated: 5 July 2021 11:25 PM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லண்டன்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

வீறுநடை போடும் இத்தாலி

4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி தனது கடைசி 32 சர்வதேச போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறது. இதில் 15 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்ததும் அடங்கும். இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் மூன்றிலும் கோல் எதுவும் விட்டுக்கொடுக்காமல் வெற்றி கண்ட இத்தாலி அணி, 2-வது சுற்றில் கூடுதல் நேரத்தில் ஆஸ்திரியாவையும் (2-1), கால்இறுதியில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியத்தையும் (2-1) வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இத்தாலி அணியில் சிரோ இம்பொபைல், லோரென்சோ இன்சினே, மானுல் லோகடெலி, மாட்டோ பெசினா (தலா 2 கோல்) ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதுடன் கோல் அடிப்பதிலும் அசத்தி வருகிறார்கள்.

விறுவிறுப்பு

யூரோ கோப்பையை 3 முறை வென்றுள்ள ஸ்பெயின் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சுவீடன், போலந்து அணிகளுடன் டிரா கண்டு தடுமாறியது. கடைசி லீக்கில் சுலோவக்கியாவை துவம்சம் செய்து அந்த அணி அடுத்த சுற்றை எட்டியது. 2-வது சுற்றில் கூடுதல் நேரத்தில் 5-3 என்ற கணக்கில் குரோஷியாவை விரட்டியத்த ஸ்பெயின் அணி கால்இறுதியில் கூடுதல் நேரம் முடிவில் சுவிட்சர்லாந்துடன் டிரா (1-1) கண்டது. இதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயினின் முன்கள வீரர்களான ஆல்வரோ மொராடா, பாப்லோ சராபியா, பெர்ரன் டாரெஸ் ஆகியோர் தங்களது துடிப்பான செயல்பாட்டால் அணிக்கு வலுசேர்க்கின்றனர்.

இத்தாலி அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் அணியாகும். ஸ்பெயின் அணியினர் தங்களுக்குள்ளேயே பந்தை அதிக முறை கடத்தி தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், வாய்ப்பு கிடைக்கும் போது தாக்குதல் பாணியையும் கடைபிடிப்பார்கள். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் சமீபகாலங்களில் தொய்வின்றி தொடர்ச்சியாக ஜொலித்து வரும் இத்தாலி அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு

இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ஸ்பெயின் 12 ஆட்டங்களிலும், இத்தாலி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 12 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. பெரிய போட்டிகளில் (யூரோ மற்றும் உலக கோப்பை) இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. இதில் இத்தாலி 4 வெற்றியும், ஸ்பெயின் ஒரு வெற்றியும் ருசித்துள்ளன. 4 ஆட்டங்கள் டிரா கண்டன.

இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story