கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து மகுடம் யாருக்கு? பிரேசில்-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை + "||" + Copa America football Brazil Argentina Today

கோபா அமெரிக்கா கால்பந்து மகுடம் யாருக்கு? பிரேசில்-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை

கோபா அமெரிக்கா கால்பந்து மகுடம் யாருக்கு? பிரேசில்-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் இன்று மோதுகின்றன.
ரியோ டி ஜெனீரோ,

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்களான நெய்மாரும், மெஸ்சியும் நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் அந்த வகையிலும் இந்த ஆட்டம் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

நடப்பு சாம்பியனான பிரேசில் அணி லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து கால்இறுதியில் சிலியையும் (1-0), அரைஇறுதியில் பெருவையும் (1-0) தோற்கடித்தது. நெய்மார் தான் பிரேசில் அணியின் ஆணிவேர் என்பதில் சந்தேகமில்லை. 2019-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை பிரேசில் கைப்பற்றிய போது, காயத்தால் நெய்மார் அதில் விளையாடவில்லை. அதனால் நெய்மார் முதல்முறையாக இந்த கோப்பையை உச்சிமுகரும் முனைப்புடன் உள்ளார். கால்இறுதி மற்றும் அரைஇறுதியில் கோல் அடித்த லூகாஸ் பக்யூட்டா, ரிச்சர்லிசன், கேஸ்மிரோ ஆகியோரும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மின்னுகிறார்கள்.

14 முறை சாம்பியனான அர்ஜென்டினா ‘ஏ’ பிரிவில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தை பெற்றது. பிறகு கால்இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரையும், அரைஇறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் வீழ்த்தியது.

அந்த அணியில் கேப்டன் லயோனல் மெஸ்சி (4 கோல்), லாட்டரோ மார்ட்டினஸ் (3 கோல்), செர்ஜியோ அகுரோ, ஏஞ்சல் டி மரியா ஆகியோர் அபாரமான பங்களிப்ைப அளித்துள்ளனர்.

இருப்பினும் உலகின் சிறந்த வீரர் விருதை 6 முறை பெற்றவரான 34 வயதான மெஸ்சிக்கு இன்னும் பெரிய போட்டிகளில் பட்டம் வெல்வது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி மற்றும் கோபா அமெரிக்கா கால்பந்தில் 2007, 2015, 2016-ம் ஆண்டுகளில் இறுதி சுற்றில் தோல்வியை சந்தித்துள்ள மெஸ்சிக்கு அந்த நீண்ட கால குறையை போக்க இது அருமையான சந்தர்ப்பமாகும். அர்ெஜன்டினா 1993-ம் ஆண்டுக்கு பிறகு இந்த கோப்பையை வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஆனாலும் உள்ளூர் சூழல் பிரேசிலுக்கு சற்று சாதகமாக தென்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 111 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 46-ல் பிரேசிலும், 40-ல் அர்ஜென்டினாவும் வெற்றி பெற்றன. 25 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. கோபாஅமெரிக்கா இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் 3 முறை இதற்கு முன்பு சந்தித்துள்ளன. ஒன்றில் அர்ஜென்டினாவும், 2-ல் பிரேசிலும் வாகை சூடின.

இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் இந்திய நேரப்படி மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு போட்டியை பார்க்கலாம். சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.