ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வெல்லப்போவது யார்? இத்தாலி-இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வெல்லப்போவது யார்? இத்தாலி-இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்
x
தினத்தந்தி 10 July 2021 11:14 PM GMT (Updated: 10 July 2021 11:14 PM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

லண்டன், 

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றை எட்டியுள்ள இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி 1966-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு எந்த உயரிய கோப்பையையும் முகர்ந்ததில்லை. நடப்பு தொடரில் கட்டுக்கோப்புடன் ஆடிய இங்கிலாந்து, எதிரணிக்கு ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது. கேப்டன் ஹாரிகேன் (4 கோல்), ரஹீம் ஸ்டெர்லிங் (3 கோல்), மேக்குவையர், ஜோர்டான் ஹென்டர்சன் ஆகியோர் நம்பிக்கை தூண்களாக உள்ளனர். உள்நாட்டில் 60 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் களம் இறங்குவதால் கூடுதல் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள்.

இதுவரை 4 கோல்கள் அடித்துள்ள இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 கோல் அடித்தால் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் கிறிஸ்டியானா ரொனால்டோவை (5 கோல்) பின்னுக்கு தள்ளிவிட்டு தங்க ஷூவை வெல்ல முடியும். ஒரு கோல் அடித்து 2 கோலுக்கு உதவிகரமாக இருந்தாலும் அவருக்கு தங்க ஷூ கிடைக்கும்.

4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது. களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டுத் தள்ளியுள்ளது. கடைசி 33 சர்வதேச போட்டிகளில் அந்த அணி தோற்றதே இல்லை. கேப்டன் ஜியார்ஜியோ செலினி, பெடரிகோ சீஸா, இம்மொபைல், லோரென்சோ இன்சினே, லியோனர்டோ போனுக்சி, கோல் கீப்பர் டோனருமா உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. நெருக்கடியை திறம்பட சமாளிப்பதை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.

இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் கூறுகையில், ‘கோப்பையை வெல்ல இரு அணிக்கும் சரிசம வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பெரிய போட்டிகளை வென்றதில் எங்களை விட இத்தாலியின் கையே ஓங்கியுள்ளது. ஆனால் இப்போது எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு கிளப் அளவில் பெரிய போட்டிகளிலும், இறுதிப்போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் இருக்கிறது. வெற்றியை வசப்படுத்த களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். கோப்பையை எங்களால் வெல்ல முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். அதே சமயம் இது மிகவும் கடினமான ஆட்டமாக இருக்கப்போகிறது என்பதை அறிவோம். அவர்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 11-ல் இத்தாலியும், 8-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. 8 ஆட்டம் டிராவில் முடிந்தது. மகுடம் சூடும் அணிக்கு ரூ.89 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். போட்டி கட்டணம், லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று வெற்றிகள் எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ.300 கோடியை பரிசாக அள்ள முடியும்.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story