இந்திய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக தாமஸ் டென்னர்பி நியமனம்


இந்திய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக தாமஸ் டென்னர்பி நியமனம்
x
தினத்தந்தி 13 Aug 2021 10:53 PM GMT (Updated: 13 Aug 2021 10:53 PM GMT)

இந்திய பெண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மேமோல் ராக்கி தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த மாதம் பதவி விலகினார்.

இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளராக 62 வயதான தாமஸ் டென்னர்பி (சுவீடன்) நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் 17 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். ஆனால் அந்த உலக கோப்பை போட்டி கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டு விட்டு விட்டது.

30 ஆண்டு கால பயிற்சி அனுபவம் கொண்ட தாமஸ் டென்னர்பி சுவீடன், நைஜீரியா போன்ற அணிகளின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு இந்தியாவை தயார்படுத்துவது தான் தாமஸ் டென்னர்பிக்கு முதல் பணியாகும். அவர் கூறுகையில், ‘இந்திய பெண்கள் சீனியர் அணியின் பயிற்சியாளர் பதவி மிகப்பெரிய கவுரவம். இதற்காக இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். இங்கு திறமைக்கு பஞ்சமில்லை என்பதை அறிவேன். ஆசிய போட்டிக்கு அணியை தயார்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்’ என்றார்.

Next Story