கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் தோல்வி + "||" + Champions League football: Barcelona, Manchester United lose in opening match

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் தோல்வி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் தோல்வி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டங்களில் பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்தன.
பார்சிலோனா,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த ஆண்டு மே மாதம் 28-ந் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ‘இ’ பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான பேயர்ன் முனிச் (ஜெர்மனி)-பார்சிலோனா (ஸ்பெயின்) கிளப் அணிகள் மோதின. சொந்த மண்ணில் விளையாடிய பார்சிலோனா அணியில் இருந்து நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி விலகி வேறு கிளப்பில் இணைந்து இருப்பதால் ஏற்பட்டு இருக்கும் பலவீனத்தை தாக்குதல் ஆட்டத்தில் பார்க்க முடிந்தது.

ஒருதரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிச் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை எளிதில் தோற்கடித்து வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. பேயர்ன் முனிச் அணி தரப்பில் தாமஸ் முல்லர் 34-வது நிமிடத்திலும், ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி 56-வது, 85-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பார்சிலோனா அணியால் கடைசி வரை கோல் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க முடியவில்லை.

‘எப்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), யங் பாய்ஸ் (சுவிட்சர்லாந்து) அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் யுவென்டஸ் கிளப்பில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்த போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 13-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். இந்த சீசனில் அந்த அணிக்காக 2-வது ஆட்டத்தில் ஆடிய அவர் அடித்த 3-வது கோல் இதுவாகும்.

35-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ஆரோன் வான் பிசாகா எதிரணி வீரரை ‘பவுல்’ செய்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட யங் பாய்ஸ் அணி 66-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் நிகோலஸ் மொமி இந்த கோலை அடித்து சமநிலையை ஏற்படுத்தினார்.

சமநிலை நீடித்ததால் இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த வேளையில், கடைசி நிமிடத்தில் யங் பாய்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் மாற்று ஆட்டக்காரர் ஜோர்டான் சிபாட்சு இந்த கோலை அடித்தார். முடிவில் யங் பாய்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது.