உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 15 Oct 2021 9:38 PM GMT (Updated: 15 Oct 2021 9:38 PM GMT)

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி.

மானஸ்,

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022), நவம்பர், டிசம்பரில் கத்தாரில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து ஜெர்மனி, டென்மார்க் அணிகள் உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்து விட்டன.

தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளில் டாப்-4 அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். 5-வது இடத்தை பிடிக்கும் அணி பிளே-ஆப் சுற்றில் விளையாட வேண்டியது வரும். இதில் நேற்று முன்தினம் இரவு மனாஸ் நகரில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களம் புகுந்த பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவேயை துவம்சம் செய்தது. நெய்மார், ராபின்ஹா (2 கோல்), கேப்ரியல் பார்போசா ஆகியோர் பிரேசில் அணியில் கோல் போட்டனர். இது நெய்மாருக்கு 70-வது சர்வதேச கோலாகும்.

இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை 43-வது நிமிடத்தில் லாட்டரோ மார்ட்டினஸ் தலையால் முட்டி அடித்தார். 2-வது பாதியில் பெனால்டி வாய்ப்பை பெரு வீரர் யோஷிமார் யோடன் வீணடித்தார். அர்ஜென்டினா கடந்த 25 சர்வதேச ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஆட்டங்களில் சிலி 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவையும், பொலிவியா 4-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயையும் வென்றது. கொலம்பியா-ஈகுவடார் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. உலக கோப்பை வாய்ப்பை நெருங்கி விட்ட பிரேசில் 31 புள்ளிகளுடன் (10 வெற்றி, ஒரு டிரா) முதலிடத்திலும், அர்ஜென்டினா 25 புள்ளிகளுடன் (7 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்திலும் உள்ளன.

Next Story