உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: போர்ச்சுகலை வீழ்த்தி செர்பிய அணி தகுதி


உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: போர்ச்சுகலை வீழ்த்தி செர்பிய அணி தகுதி
x
தினத்தந்தி 16 Nov 2021 3:33 AM GMT (Updated: 16 Nov 2021 3:33 AM GMT)

தகுதி சுற்றில் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி அளித்து செர்பியா அணி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

லிஸ்பன்,

32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த ஆண்டு (2022), நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. இதில் கத்தார் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே கால்பதிக்க முடியும். இதையொட்டி கண்டங்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 55 அணிகள் மொத்தம் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இவற்றின் மூலம் 13 அணிகள் உலக கோப்பை வாய்ப்பை பெறும். இதில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன.


இந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் ‘ஏ ’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, செர்பியாவை லிஸ்பன் நகரில் சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த போர்ச்சுகல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கடைசி நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலையால் முட்டி கோல் அடித்து தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார்.

5 அணிகள் இடம் பெற்ற இந்த பிரிவில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் செர்பியா 20 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 டிரா) முதலிடத்தை பிடித்ததுடன் உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. கடைசி ஆட்டத்தில் டிரா செய்தாலே போதும் என்ற நிலைமையில் ஆடிய போர்ச்சுகல் (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளி) தோல்வி அடைந்ததால் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சறுக்கியது. இனி அந்த அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் விளையாடி அதன் மூலமே உலக கோப்பை போட்டியை எட்ட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

Next Story