ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி இன்று தொடக்கம்


ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 18 Nov 2021 7:36 PM GMT (Updated: 18 Nov 2021 7:36 PM GMT)

11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது.

கோவா,,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்திய வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து விளையாடும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., பெங்களூரு, கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய 11 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 23-ந் தேதி ஐதராபாத்தை சந்திக்கிறது. 


Next Story