ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-மோகன் பகான் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-மோகன் பகான் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 10 Dec 2021 9:16 PM GMT (Updated: 10 Dec 2021 9:16 PM GMT)

இன்று நடைபெற இருக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோத இருக்கின்றன.

கோவா,

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் மல்லுகட்டுகிறது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான சென்னையின் எப்.சி. 2 வெற்றி (ஐதராபாத், நார்த் ஈஸ்ட் யுனைடெட்டுக்கு எதிராக), ஒரு டிரா (ஈஸ்ட் பெங்காலுக்கு எதிராக) என்று 7 புள்ளிகளுடன் உள்ளது. மோகன் பகான் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று இருக்கிறது. 

தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ள சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் போசிதார் பாண்டோவிச் நேற்று அளித்த பேட்டியில் ‘ஐ.எஸ்.எல். லீக்கில் சிறந்த அணிகளில் ஏ.டி.கே. மோகன் பகானும் ஒன்று. அவர்கள் சாம்பியன் அணி. கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்கள். கடைசி இரு லீக் ஆட்டங்களில் தோற்றதால் மீண்டெழும் உத்வேகத்துடன் இப்போது மேலும் அபாயகரமான அணியாக இருக்கிறார்கள். 

அதே சமயம் தோல்வியே சந்திக்காமல் இருப்பது எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. கடந்த ஆட்டத்தில் நாங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால் இப்போது 9 புள்ளிகளுடன் இருந்திருக்கலாம். நாங்கள் இதைவிட சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகும்’ என்றார். கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த ஆட்டங்களில் ஒன்று ‘டிரா’ ஆனது. மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 9.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி, பெங்களூரு எப்.சி.யை எதிர்கொள்கிறது. இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 81-வது நிமிடத்தில் ஜோனதாஸ் டி ஜீசஸ் அடித்தார்.


Next Story