போட்டியின் நடுவே மாரடைப்பு... பிரபல கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த சோகம்!


போட்டியின் நடுவே மாரடைப்பு... பிரபல கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த சோகம்!
x
தினத்தந்தி 26 Dec 2021 6:02 AM GMT (Updated: 26 Dec 2021 7:29 AM GMT)

அல்ஜீரியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர் போட்டியினிடையே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஜியர்ஸ்,  

வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் கால்பந்து போட்டியின் இடையே வீரர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அல்ஜீரியாவை சேர்ந்த 30 வயதான சோபியேன் லோவ்கர் எம் சி எஸ் கால்பந்து கிளப்  அணிக்காக விளையாடி வந்தவர்.

இந்நிலையில், அல்ஜீரியன் லீக்-2 கால்பந்து தொடரின் இரண்டாவது பிரிவு ஆட்டம் நேற்று ஓரான் கால்பந்து மைதானத்தில்  நடைபெற்றது.

இந்த போட்டியின் முதல் பாதியில், சோபியேன் லோவ்கர் பந்தை துரத்தி ஓடிக் கொண்டிருந்த போது அவரது அணியை சேர்ந்த கோல் கீப்பர் மீது  எதிர்பாராத விதமாக மோதினார். அதன் பின், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து விளையாடினார். ஆனால், மீண்டும் விளையாட வந்த 10 நிமிடங்களிலேயே கீழே மயங்கி விழுந்தார்.உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த சோக செய்தியை அறிந்ததும் இரு அணி வீரர்களும் போட்டியை முடித்து கொண்டனர். ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது இந்த சோக சம்பவம். மேலும், இரு அணி வீரர்களும் கதறி அழுதது பார்வையாளர்களின் கண்களை குளமாக்கி உள்ளது.

முன்னதாக கடந்த ஒரே வாரத்தில் குரோஷிய கால்பந்து வீரர் மரின் காசிக், ஓமன் தேசிய அணி வீரர் முகலேட் அல்-ரகாடி மற்றும் எகிப்திய கோல்கீப்பர் அகமது அமீன் ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் இந்த வரிசையில் நான்காவது வீரராக  சோபியேன் லோவ்கரும் சேர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Next Story