பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jan 2022 8:24 PM GMT (Updated: 2022-01-20T01:54:05+05:30)

12 அணிகள் பங்கேற்கும் பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

மும்பை,

பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள மும்பை, நவிமும்பை, புனே ஆகிய நகரங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, 8 முறை சாம்பியனான சீனா, சீனதைபே, ஈரான், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ‘சி’ பிரிவில் நடப்பு சாம்பியனான ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், மியான்மர் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த இரு அணிகளும் என்று மொத்தம் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

1979-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி அஷலதா தேவி தலைமையில் களம் இறங்குகிறது. நட்சத்திர வீராங்கனை பாலாதேவி காயத்தால் இடம்பெறாவிட்டாலும் பிரேசில் உள்ளிட்ட அணிகளுடன் விளையாடிய அனுபவம் நமது அணிக்கு உள்ளது. சந்தியா, மாரியம்மாள், சவுமியா, இந்துமதி, கார்த்திகா ஆகிய தமிழக வீராங்கனைகளும் இடம் பெற்றிருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும். 

இந்த கோப்பையை இந்தியா ஒரு முறையும் வென்றதில்லை. அதிகபட்சமாக 1979 மற்றும் 1983-ம் ஆண்டுகளில் 2-வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த முறை இந்தியா வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உலக கோப்பைக்கு வாய்ப்பு

இது, 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அமைந்திருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆசிய கோப்பை போட்டியில் கால்இறுதியை எட்டினால் உலக கோப்பை வாய்ப்பை நெருங்கி விடலாம். அரைஇறுதிக்கு முன்னேறி விட்டால் உறுதியாக உலக கோப்பை அதிர்ஷ்டம் கிட்டும். 

‘இந்த போட்டியில் எங்களது முதல் இலக்கு கால்இறுதி சுற்றை அடைவது தான். கால்இறுதிக்கு வந்து விட்டால் நாக்-அவுட் சுற்றில் எல்லோருக்கும் நெருக்கடி இருக்கும். அதன் பிறகு எதுவும் நடக்கலாம். அதனால் கால்இறுதி தான் முதல் குறி’ என்று இந்திய அணியின் பயிற்சியாளர் தாமஸ் டெனர்பி குறிப்பிட்டார்.

உலக தரவரிசையில் 55-வது இடம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 70-ம் நிலை அணியான ஈரானை இன்று (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது. தரவரிசையில் பின்தங்கிய ஈரானை தோற்கடித்தால் தான் இந்திய அணி அடுத்த ஆட்டங்களை நெருக்கடியின்றி எதிர்கொள்ள முடியும். 

முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சீனா- சீனதைபே அணிகள் சந்திக்கின்றன. இந்திய அணி அடுத்து 23-ந்தேதி சீனதைபேயுடனும், 26-ந்தேதி சீனாவுடனும் மோதுகிறது. போட்டியை யூரோ ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story