பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா- சீனதைபே அணிகள் இன்று மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 8:20 PM GMT (Updated: 22 Jan 2022 8:20 PM GMT)

இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விடலாம்.

நவிமும்பை,

பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் 3 இடங்களில் நடந்து வருகிறது. 

இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த இரு அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, முதல்ஆட்டத்தில் ஈரானுடன் கோல் இன்றி டிரா கண்டது. இந்த நிலையில் தரவரிசையில் 55-வது இடம் வகிக்கும் இந்தியா தனது 2-வது லீக்கில் இன்று 39-ம் நிலை அணியான சீனதைபேயை நவிமும்பையில் சந்திக்கிறது. 

சீனதைபே தனது முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் பணிந்தது. எனவே இன்றைய ஆட்டம் இரு அணிக்குமே முக்கியமானது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விடலாம். 

இ்ந்திய பயிற்சியாளர் தாமஸ் டெனர்பி கூறுகையில், ‘ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது தற்காப்பு ஆட்டம் நிலையாக இருந்தது. ஆனால் தாக்குதல் பாணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது’ என்றார்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யூரோ ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story