15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் இந்தியா சாம்பியன் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை சாய்த்தது


15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் இந்தியா சாம்பியன் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை சாய்த்தது
x
தினத்தந்தி 18 Dec 2016 9:45 PM GMT (Updated: 18 Dec 2016 7:42 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் பெல்ஜியத்தை தோற்கடித்து இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை உச்சி முகர்ந்தது.

லக்னோ, 

ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் பெல்ஜியத்தை தோற்கடித்து இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை உச்சி முகர்ந்தது.

ஜூனியர் ஆக்கி

16 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வந்தது. இதில் சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பெல்ஜியமும் நேற்றிரவு கோதாவில் இறங்கின. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் முழுமூச்சுடன் வேகம் காட்டிய இந்திய வீரர்கள் பந்தை கட்டுப்பாட்டில் (60 சதவீதம்) வைத்திருப்பதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. 8-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் கோல் அடித்தார். கோல் கீப்பர் தடுத்து திரும்பிய பந்தை அவர் கோல் அடித்த விதம் பிரமிக்க வைத்தது. 22-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் சிம்ரஜீத்சிங் கோல் போட்டார். முதல் பாதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வலுவாக முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் பெல்ஜியம் வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அலைஅலையாக தாக்குதல் நடத்தினர். ஆனாலும் இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாகியா அவர்களின் முயற்சிகளை முறியடித்தார். இந்தியா மேலும் சில கோல்கள் அடித்திருக்கலாம். மொத்தம் 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணாக்கினார்கள்.

இந்தியா சாம்பியன்

கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது, பெல்ஜியம் கோல் கீப்பர் லோய்க் வான் டோரன் ஹெல்மெட், கால்உறையை கழற்றி போட்டு ஒரு வீரராக நுழைந்தார். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நோக்குடன் இந்திய கோல் பகுதியை முற்றுகையிட்டனர். இந்திய வீரர்கள் தடுப்பாட்ட யுக்தியை கடைபிடித்த போதிலும் கடைசி நிமிடத்தில் (70-வது நிமிடம்) பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியத்தின் பாப்ரிஸ் வான் போக்ரிஜிக் கோல் அடித்தார். அது அவர்களுக்கு ஆறுதல் கோலாகவே அமைந்தது.

திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்து 2-வது முறையாக உலக சாம்பியன் மகுடத்தை சூடியது. ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2001-ம் ஆண்டு பட்டத்தை வென்று இருந்தது. போட்டியை நடத்திய நாடு கோப்பையை ருசித்தது, இதுவே முதல் முறையாகும். கடந்த உலக கோப்பையில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி, இந்த முறை தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய இளம் படைக்கு, ஆக்கி இந்தியா அமைப்பு மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பரிசு அறிவிப்பு

இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சமும், பயிற்சி உதவியாளர்களுக்கு ரூ.2½ லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அறிவித்துள்ளது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தியது. 

Next Story