ஹாக்கி

அட்டகாச ஆக்கி நாயகர்! + "||" + Hockey Hero

அட்டகாச ஆக்கி நாயகர்!

அட்டகாச ஆக்கி நாயகர்!
கடந்த ஜூன் 18–ம் தேதியை இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மறக்கமாட்டார்கள், இந்திய ஆக்கி ரசிகர்களும் மறக்கமாட்டார்கள்.
அந்த நாளில்தான் லண்டனில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதே நாளில், அதே லண்டனின் இன்னோர் இடத்தில், இந்திய ஆக்கி அணி பாகிஸ்தானை 7–1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.

அந்த அதிரடி வெற்றியின் பின்னால் ஒரு 25 வயது வீரர் இருக்கிறார். அவர், மன்பிரீத் சிங்! இந்திய ஆக்கி அணியின் கேப்டனும் இவரே.

வெற்றித் தலைவர் 

மன்பிரீத் தலைமையில் இந்தியா சில அசாதாரண வெற்றிகளைப் பெறத் தொடங்கியிருக்கிறது. அவற்றில், வெல்லவே முடியாது என்று தோன்றும் நெதர்லாந்துக்கு எதிராக சமீபத்தில் பெற்ற வெற்றியும் அடங்கும்.

ஆனால் எத்தனை பேர் மன்பிரீத் பற்றி அறிந்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி. சிலர், போகிறபோக்கில் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஆனால் இந்தியாவின் தேசிய விளையாட்டை நேசிக்கும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பெயர், மன்பிரீத்.

துடிப்பான இந்த இளம் வீரரின் தலைமையில் இந்திய ஆக்கி அணி பல வெற்றிகளைக் குவிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மன்பிரீத் கடந்துவந்திருக்கும் பாதை அப்படி.

2013–ல் மலேசியாவின் சுல்தான் ஆப் ஜோகுர் கோப்பை, ஜூனியர் உலகக் கோப்பை ஆகியவற்றில் மன்பிரீத் தலைமையிலான இளம் (ஜூனியர்) இந்திய அணி சிறப்பாக மிளிர்ந்தது. இந்த நட்சத்திர நடுக்கள வீரர், 2014–ம் ஆண்டின் சிறந்த வீரராக ஆசிய ஆக்கி சம்மேளனத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதீத ஆக்கி நேசம் 

ஆக்கியை வெறித்தனமாக நேசித்ததாலேயே இந்த அளவுக்கு உயர்ந்திருப்பவர், மன்பிரீத்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள மித்தாபூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். இவரது இரு அண்ணன்களும் ஆக்கி வீரர்கள். அது, மன்பிரீத் இந்த விளையாட்டை நோக்கி ஈர்க்கப்பட ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

‘‘நான் ஆக்கி விளையாட முதல் ஊக்கம், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும், எங்கள் மாவட்ட டி.எஸ்.பி.யுமான பர்கத் சிங். அதுதவிர, எனது அண்ணன்கள்  ஆக்கி விளையாடிப் பெற்ற பரிசுகளும் என்னை இந்த விளையாட்டை நோக்கி காந்தமாய் இழுத்தன’’ என்று புன்னகைக்கிறார்.

ஆனால், மூத்தவர்களைப் போல கடைக்குட்டி மன்பிரீத்தும் ஆக்கி விளையாடுவதை இவரது அம்மா விரும்பவில்லை. அதுவும் ஒரு போட்டியில் இவர் கீழே விழுந்து மூக்கை உடைத்துக்கொண்டபிறகு, ஆக்கி மைதானம் பக்கமே போகக் கூடாது என்றிருக்கிறார்.

‘‘நான் ஆக்கி விளையாடுவதை எங்கம்மாவோ, என் அண்ணன்களோ விரும்பாவிட்டாலும் நான் தொடர்ந்து அதில் தீவிரமாக இருந்தேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது ஒருசமயம், நான் பயிற்சிக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, எனது ஒரு அண்ணன் என்னை ஓர் அறைக்குள் தள்ளி வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு போய்விட்டார். அங்கிருந்து எப்படியோ தப்பித்து, எங்கண்ணன் பயிற்சி முகாமில் போய் நின்ற அதேநேரத்தில் நானும் போய் நின்றேன். என்னைப் பார்த்ததும் அண்ணனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. என்னை அடிக்க ஓடிவந்தார். 

அவரைத் தடுத்த பயிற்சியாளர், ‘பையன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறானே... அவனையும் கொஞ்சநாள் ஆட விட்டுத்தான் பார்ப்போமே?’ என்றார்’’ –இப்படித் தனது ஆக்கி பிரியத்தின் கதை சொல்கிறார், மன்பிரீத்.

முதல் பரிசுத் தொகை 

ஆக்கியில் பெற்ற வெற்றியால் மன்பிரீத்துக்கு முதன்முதலில் கிடைத்த பரிசுத்தொகை ரூ. 500. அதுதான் அவருக்கு அம்மாவிடம் இருந்து அடி விழாமலும் காத்திருக்கிறது.

அப்போது ஆக்கி விளையாடுவதற்காக வீட்டை விட்டு சில நாட்கள் வெளியே இருந்திருக்கிறார், மன்பிரீத். மகனைப் பற்றி கவலையும் கோபமும் கொண்ட அம்மா, அவன் பரிசுத்தொகையுடன் வந்து நின்று சிரித்தபோது குளிர்ந்திருக் கிறார். அவனை ஆக்கி ஆட அனுமதிப்பது என்றும்              முடிவெடுத்திருக்கிறார்.

குடும்பத்தின் ஆதரவுடன் மன்பிரீத்தின் ஆக்கி காதல் வளர்ந்தது. 2005–ம் ஆண்டில், ஜலந்தரில் உள்ள சுர்ஜித் ஆக்கி அகாடமியில் பயிற்சி பெறத் தொடங்கினார் மன்பிரீத். இந்தியாவில் உள்ள சிறந்த ஆக்கி பயிற்சி மையங்களில் ஒன்று இது.

அங்கு பயிற்சி பெறத் தொடங்கிய ஆறாண்டுகளில், சர்வதேச அளவில் அறிமுகமானார் மன்பிரீத். அதன்பிறகு இவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று வருகிறார்.

மனம் தளரவில்லை 

தேசிய அணியில் ஜொலித்தாலும், மன்பிரீத்துக்கு பணமோ, புகழோ குவிந்துவிடவில்லை, விளம்பரங்களில் நடிக்கவில்லை, பத்திரிகை அட்டைகளில் அதிகம் இடம்பிடிக்கவில்லை. இந்தியாவில் நிலவும் கிரிக்கெட் ஆதிக்கம்தான் இதற்குக் காரணம்.

ஆனால் மன்பிரீத் மனம் இழக்கவில்லை. நம்பிக்கையாகவே பேசுகிறார்...

‘‘கடந்த சில ஆண்டுகளில் இந்திய ஆக்கி சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. நான் உள்ளிட்ட பல ஆக்கி வீரர்கள் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறோம், பணிப் பாதுகாப்பும் ஏற்பட்டிருக்கிறது. விளம்பர வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சர்தார் சிங்குக்கு பல வாய்ப்புகள் கிட்டியிருக்கின்றன, பரவலாக அறியப்பட்ட நபராகவும் இருக்கிறார். எனக்கும் கூட விளம்பரங்களில் நடிக்க அழைப்புகள் வந்தன. ஆனால் நான் இப்போதைக்கு போட்டி, பயிற்சி என்று பரபரப்பாக இருப்பதால் என்னால் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.’’

மன்பிரீத்தின் ‘ஹீரோக்கள்’

ஆக்கியில் தனக்குப் பல ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்றும் மன்பிரீத் கூறு          கிறார். அவர்களில் முக்கியமானவர், முன்னாள் ஜெர்மன் கேப்டன், மோரிட்ஸ் பர்ட்ஸ். மோரிட்ஸுடன் மன்பிரீத் ஆக்கி இந்தியா லீக்கில் இணைந்து விளையாடியிருக்கிறார்.

‘‘ஆக்கி விளையாட்டில் எனக்குப் பல உபயோகமான குறிப்புகளை மோரிட்ஸ் கூறியிருக்கிறார்’’ என்று சொல்லும் மன்பிரீத் முன்மாதிரியாகக் கருதும் இன்னொரு வீரர், அவரது சக மாநிலத்தவரும் சீனியர் வீரருமான சர்தார் சிங். அவர் ஆக்கி விளையாடும் விதம் தனக்கு மிகவும் ஊக்கமாக உள்ளதாகக் கூறுகிறார்.

ஆக்கி தாண்டி மன்பிரீத்துக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள், கால்பந்து புயல் களான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், டேவிட் பெக்காமும். அவர்களைப் போலவே 7–ம் எண் பொறித்த ஆடை அணிந்து விளையாடுவதில் இவருக்கு தனி சந்தோ‌ஷம்.

தனது அபிமான கால்பந்து வீரர் ரொனால்டோவைப் போல தானும் திறமையான, ஆனால் வசதியற்ற ஆக்கி வீரர்களுக்கு உதவ வேண்டும் என்று மன்பீரித்  ஆசைப்படுகிறார். 

அப்பா... அப்பா... 

துடிப்பான மன்பிரீத்தின் மனதின் மூலையில் ஒரு சோகமும் உறைந்து கிடக்கிறது. அது, அவரது அப்பாவின் திடீர் மரணம். இந்திய கேப்டனாக தன்னை தனது தந்தை பார்க்கவில்லை என்ற ஆழ்ந்த வருத்தம் இன்றும் இவருக்குள் இருக்கிறது.

தந்தையின் மரணத்தின்போது மன்பிரீத் ஒரு சர்வதேசத் தொடரில் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்பாவின் மரணச்செய்தி அறிந்தவர் அதிர்ச்சியடைந்து, சொந்த ஊருக்கு விரைந்திருக்கிறார். 

இறுதிச்சடங்குகள் முடிந்தவுடனேயே மன்பிரீத்தை விளையாட கிளம்பிச்செல்லும்படி  வற்புறுத்தியவர், ஒரு காலத்தில் அவர் ஆக்கி விளையாடுவதை எதிர்த்த அம்மாதானாம்.

எனவேதான் ஒரு குழந்தை விளையாட்டில் வளர அதன் பெற்றோரது ஆதரவு மிக முக்கியம் என்கிறார்.

‘‘ஆக்கி என்றில்லை, கபடி, மல்யுத்தம் என்று எந்த விளையாட்டாக இருந்தாலும் உங்கள் குழந்தைக்கு ஆர்வமுள்ள விளையாட்டில் ஊக்குவியுங்கள்!’’

மன்பிரீத் சொல்லும் இந்த வார்த்தைகளை ஒவ்வோர் இந்தியப் பெற்றோரும் பின்பற்றட்டும்!