உலக ஆக்கி லீக்: இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது


உலக ஆக்கி லீக்: இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது
x
தினத்தந்தி 10 Dec 2017 10:45 PM GMT (Updated: 10 Dec 2017 8:04 PM GMT)

உலக ஆக்கி லீக்கில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

புவனேஸ்வரம்,

3-வது மற்றும் கடைசி உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் 3-வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்கள் இந்தியாவும், ஜெர்மனியும் நேற்று மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய வீரர்கள் களத்தில் வரிந்து கட்டி நின்றனர்.

பலம் வாய்ந்த ஜெர்மனி அணியில் 7 வீரர்கள் காயம் மற்றும் உடல்நலக்குறையால் இறங்க முடியவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள் அடிக்கடி ஜெர்மனியின் கோல் பகுதிக்குள் ஊடுருவினர். முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ஜெர்மனியின் உத்வேகமும், போராட்ட குணமும் துளியும் தளரவில்லை. எல்லா வகையிலும் இந்தியாவுக்கு ஈடுகொடுத்து ஆடினர்.


21-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப்சிங் அடித்த பந்தை ஜெர்மனி கோல் கீப்பர் தோபியாஸ் வால்டர் தடுத்தார். திரும்பி வந்த பந்தை மற்றொரு இந்திய வீரர் எஸ்.வி.சுனில் கோலுக்குள் அனுப்பி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இதையடுத்து முதல் பாதியில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 36-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மார்க் அப்பெல் பதில் கோல் திருப்பியதால் சமநிலை ஏற்பட்டது.

யார் பக்கம் வெற்றி கனியும் என்ற எதிர்பார்ப்பு எகிற, 54-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியாவின் ஹர்மன்பிரீத்சிங் அருமையாக கோலாக்கினார். ஜெர்மனி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 7 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர்.

முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் லீக்கில் ஜெர்மனியிடம் அடைந்த தோல்விக்கும் இந்தியா பழிதீர்த்துக் கொண்டது.

பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 10 லட்சம் வழங்குவதாக அறிவித்து அதற்குரிய காசோலையை வழங்கி பாராட்டினார்.

இரவில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ‘நம்பர் ஒன்’ அணியும், ஒலிம்பிக் சாம்பியனுமான அர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த மோதலில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், ஆட்டம் முடிய 2 நிமிடம் இருக்கும் போது, ஆஸ்திரேலிய வீரர் பிளாக் கோவர்ஸ், ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை கோலாக மாற்றி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Next Story